உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாக்காளர்கள் அளிக்கும் படிவங்களை அரசியல் கட்சியினர் வழங்க அனுமதி

 வாக்காளர்கள் அளிக்கும் படிவங்களை அரசியல் கட்சியினர் வழங்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான படிவங்களை, வாக்காளர்களிடம் சேகரித்து வழங்க, அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தகுதியான நபர்கள் மற்றும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான மனுக்களை அளிக்க, ஜனவரி, 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள், தினமும், 10 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சேகரித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.

இத தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களின் பங்கு இன்றியமையாதது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், ஓட்டுச்சாவடி முகவர்கள், தினமும், 10 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. படிவங்களில் உள்ள விபரங்கள், தன்னால் சரி பார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற உறுதிமொழியை, அவர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரி பார்த்து, அவற்றை டிஜிட்டல் வடிவில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் குழப்பம் ஏற்படும் கணக்கெடுப்பு பணியின் போதும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க, அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியது. இதை பயன்படுத்தி, இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறிய வாக்காளர்களின் பெயர்களை, வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்து விட்டனர். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யாதவர்களின் பெயரும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது. தற்போது, மீண்டும் வாக்காளர்களை சேர்க்க, நீக்க, வாக்காளர்களிடம் படிவங்களை பெற்று வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது தகுதி இல்லாத நபர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வழி வகுக்கும். குறிப்பாக முகவரி மாறி சென்றவர்கள் பெயர் இடம் பெறும். இதனால், இறுதி வாக்காளர் பட்டியலில், குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அரசியல் கட்சிகளின் முகவர்கள், படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளிக்கக்கூடாது. அப்போது தான், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நோக்கம் நிறைவேறும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anbuselvan
டிச 31, 2025 13:09

ஆளுங்கட்சி 2026 தேர்தலில் வென்று விடும் போல இருக்கே


naranam
டிச 31, 2025 11:54

திருடனிடமே வீட்டு சாவியைக் கொடுத்து வீட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்வது போலல்லவா இருக்கிறது!


GMM
டிச 31, 2025 11:46

படிவங்களில் உள்ள விபரங்கள், அரசியல் கட்சி ஓட்டு சாவடி முகவர்கள் எதன் அடிப்படையில் சரிபார்க்க, திருப்தி அடைந்து உறுதி மொழி வழங்க வேண்டும்? கட்சி உறுப்பினர் அட்டை இருக்கும். அரசு பணி செய்ய அரசு துறைகள் ரேஷன், கேஸ், வரி ரசீது உள்ள போது, பணியை கட்சிகளிடம் ஒப்படைக்க முடியுமா? கட்சி முகவர், கட்சி நிலையற்றது. தவறான அனுமதி.


lakshmikanthan S.B
டிச 31, 2025 11:01

எங்கள் வீட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வேறு இடங்களில் சென்று நிரந்தரமாக தங்கி இருக்கும் 10 ஓட்டுக்களை BLO. விடம் சொல்லி நீக்க சொன்னால் நீக்கவே இல்லை. கவுன்சிலரும் உடந்தை.


kgb
டிச 31, 2025 10:07

இதுக்கு சரியான ஆள் ஏரியா போஸ்ட்மன் மட்டுமே


ராமகிருஷ்ணன்
டிச 31, 2025 07:25

கள்ள ஓட்டு களவாணிகள் புகுந்து விளையாடி விடுவார்கள்.ஜாக்கிரதை


nagendhiran
டிச 31, 2025 06:26

அதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை