ஓட்டுச்சாவடி அலுவலர் ஊக்கத்தொகை உயர்வு
சென்னை: ஓட்டுச்சாவடி அலுவலர்களின் ஆண்டு ஊக்கத் தொகையை, 14,000 ரூபாயாக, இந்திய தேர்தல் கமிஷன் உயர்த்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஓட்டுப் பதிவு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளும், இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவர்களின் பணி அர்ப்பணிப்பு காரணமாக, போலிகள் இல்லாத, தகுதியான வாக்காளர்களை கொண்ட பட்டியல் வெளியாக வா ய்ப்புள்ளது. தமிழகத்தில், 68,467 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஆண்டு ஊக்கத்தொகையாக, 7,180 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதை, 14,000 ரூபாயாக, இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தி உள்ளது. பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக, 6,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகத்திலும், இதுபோன்று சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.