உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பதவியை இழந்த பின்னரும் கெத்து அரசியலை குறைக்காத பொன்முடி

அமைச்சர் பதவியை இழந்த பின்னரும் கெத்து அரசியலை குறைக்காத பொன்முடி

அமைச்சர் பதவியை இழந்தாலும் தன், 'கெத்து' அரசியலுக்கு எந்த குறையும் இல்லை என்பதை தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி காட்டி வருவதால், கட்சியின் எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள, 'ஈ.வெ.ராமசாமி அறிவியல் உலகம்' திட்டத்திற்காக, தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதையடுத்து, பலரும் முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறிப்பிட்ட வங்கிக் கணக்கு வாயிலாக பணத்தை செலுத்தி விட்டனர். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தன் எம்.எல்.ஏ., பதவிக்கான ஒரு மாதச் சம்பளத்தை, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியதொடு, அந்த போட்டோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். உடனே, 'முதல்வரை சந்தித்தார் அண்ணன், விரைவில் முடிசூடப் போகிறார் மன்னன்' என அவரது ஆதரவாளர்கள், அந்த படத்தை, சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். இதற்காகவே, முன்னாள் அமைச்சர் பொன்முடியால் நியமிக்கப்பட்டிருப்போர், இந்தப் பணியை கனக்கச்சிதமாக செய்து வருகின்றனர். அதே நேரத்தில், 'ஈ.வெ.ராமசாமி அறிவியல் உலகம் திட்டத்துக்கு, திராவிடர் கழகத்திடம் இல்லாத பணமா; எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் சம்பள பணத்தை கொடுக்க வேண்டுமா; அதை தொகுதி மேம்பாட்டிற்கு ஒதுக்கலாமே' என, வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை வைக்கின்றனர். இதற்கிடையே, பொன்முடியை போலவே, முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்க, அமைச்சர்களும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், அனுமதி கேட்பதால், முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு காலத்தில் குறுநில மன்னராக கோலோச்சிய பொன்முடி, தன் வாய்த்துடுக்கு பேச்சால், அமைச்சர் பதவியை இழந்தார். பதவி இல்லாவிட்டாலும், செல்வாக்கு, கெத் து எதுவும் குறையவில்லை என்பதை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் காட்டி வருகிறார். வரும் தேர்தலில் 'சீட்' கிடைத்து, வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராகி விடலாம் என்ற ஆசையில் இருக்கும் அவர், தி.மு.க., தலைமையிடம் நெருக்கம் காட்டி வருகிறார். ஆனால், பொன்முடிக்கு சீட் வழங்கினால், பெண்களையும், ஹிந்து மதத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்ய, எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அவருக்கு மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில், தேவையில்லாமல் முதல்வரை சந்தித்து, ஈ.வெ.ராமசாமி அறிவியல் உலகத் திட்டத்துக்கு பொன்முடி நிதி வழங்கியதை அடுத்து, ஏற்கனவே வங்கி கணக்கு வாயிலாக பணம் அனுப்பிய எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மீண்டும் முதல்வரை நேரில் சந்தித்து பணம் கொடுக்க விருப்பப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு இரட்டைச் செலவு ஏற்பட்டிருக்கிறது. கூடவே, முதல்வரின் நேரமின்மைக்கு இடையிலும், இந்த விஷயத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு அதிகாரிகளும் புலம்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
அக் 11, 2025 06:50

இவனை போன்ற முள்படுக்கைகள் நேபோட்டிசத்தை அழிக்கும் ஆயுதங்கள் என்றும் கொள்ளலாம் , நீ நடத்து


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை