மேலும் செய்திகள்
ஒரு பதவிக்கு இத்தனை போட்டியா?
28-Oct-2024
ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை, நடிகர் விஜய் முன்வைத்துள்ள நிலையில், தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க உள்ளது.தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட வாரிய தலைவர் பதவிகள் உள்ளன. தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு மட்டுமே வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவி மட்டுமே தரப்பட்டது. முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், அப்பதவியில் மூன்றாண்டுகள் இருந்தார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை.இந்நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை, த.வெ.க., தலைவர் விஜய் முன்வைத்து உள்ளார். அதன் வாயிலாக, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, அவர் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜய் அறிவிப்பை வரவேற்றுள்ளன.அத்துடன், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் சரவணன், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், 'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். மாநில அரசு சார்ந்த பதவிகளை வழங்குவதில், காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.இதையடுத்து, தமிழக காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகனுக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., நிர்வாகிகளும் வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேர்தலில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள், தோல்வி அடைந்தவர்களுக்கு ஏதாவது பதவி வழங்கி, கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தவும், விஜய் பக்கம் சாய்வதை தடுக்கவும், தி.மு.க., தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.- நமது நிருபர் -
28-Oct-2024