ஏ.டி.எம்., கட்டணத்தை உயர்த்தியது தபால் துறை
ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் எடுப்பதற்கான கட்டணத்தை, தபால் துறை மாற்றி அமைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளுக்கு பின், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது. தற்போது, தபால் துறை ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் எடுப்பதற்கான கட்டண விதிமுறைகளை, அந்த துறை மாற்றி அமைத்து உள்ளது. அதாவது, மெட்ரோ என வரையறுக்கப்பட்ட நகரங்களில், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் வாயிலாக, தபால் ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி மூன்று முறைக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கும் போதும், 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இது, 23 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., என்று மாற்றப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைகளுக்கு, 8 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டண நடைமுறை இருந்தது. தற்போது, 11 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., என்று மாற்றப்பட்டு உள்ளது. இந்நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. - நமது நிருபர் -