கம்பி அறுந்ததும் மின்சாரம் கட் கிடப்பில் போன திட்டத்தால் பலி
சென்னை:தமிழகத்தில் மின் கம்பி அறுந்து விழுந்த உடனே மின்சாரத்தை துண்டிக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த மின் வாரியம் தாமதம் செய்து வருவதால், மின் விபத்தில் மக்கள் சிக்குவது தொடர்கிறது. எனவே, அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சென்னையில் சில இடங் களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. மழை காலங்களில் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுகின்றன. இதனால், அந்த கம்பியை மிதிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் மின் விபத்தில் சிக்கி, காயம், உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.இதை தடுக்க, மின் கம்பி அறுந்து விழுந்த உடனே மின்சாரத்தை துண்டிக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, 2022 - 23ல் மின் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, அனைத்து மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களிலும், 'டிஜிட்டல் மீட்டர், டிரிப்பிங் டிவைஸ்' சாதனம் பொருத்தப்பட்டு, டிரான்ஸ்பார்மர் கண்காணிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த கட்டமைப்பு, தொலைதொடர்பு வசதியுடன் கூடிய பிரிவு அலுவலக கணினியில் இணைக்கப்படும். இதனால், மின் கம்பி அறுந்து விழுந்ததும், டிரப்பிங் டிவைஸ் உடனே செயல்பட்டு, டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் வழித்தடத்தில் மின்சாரம் செல்வதை துண்டிக்கும். மின் கம்பியில் மின்சாரம் செல்வது தடைபடு வதுடன், அந்த விபரம் பிரிவு அலுவலகத்திற்கு, 'சிக்னல்' வாயிலாக தெரிவிக்கப்படும். உடன் அந்த இடத்திற்கு ஊழியர்கள் வந்து சரிசெய்வர். இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மின் வாரியம், சி.பி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்டது. இருப்பினும் இதுவரை, அத்திட்டம் செயல்பாட்டிற்கு வராததால், இந்த மழை சீசனிலும் மின் விபத்துகள் தொடர்கின்றன. எனவே, மின் விபத்துகளை தடுக்க, அத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழை காலத்தில் மின் விபத்தை தடுக்க, தாழ்வாக தொங்கும் மின் கம்பியை உயர்த்தி கட்டுவது, சேதமடைந்த கம்பத்தை மாற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்தில், 4.15 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன; அவற்றில் ஒரே சமயத்தில் மின் விபத்து தடுப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்த அதிக நிதி தேவை. மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில், முதற்கட்டமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.