பயிற்சி மருத்துவர் நியமனம் சட்ட போராட்ட குழு எதிர்ப்பு
சென்னை:'தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்க, போதிய டாக்டர்களை நியமிக்காமல், 'வார் ரூம்' மட்டும் அமைப்பது தீர்வாகாது' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழுத் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். துறையில் உள்ள அடிப்படை தேவைகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு காணாமல் மாற்றம் காண முடியாது. தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு மருத்துவமனைகளில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, புதிதாக டாக்டர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்களை நியமிக்கும்படி கோரி வருகிறோம். உயிர் காக்கும் துறையில், அடிப்படையாக தேவைப்படும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்காமல், எவ்வாறு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?நீண்ட காலமாக அரசு டாக்டர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது. அரசு வெளியிட்ட அரசாணை 354ஐ அமல்படுத்தவே, ஆண்டு கணக்கில் போராடி வருகிறோம். மகப்பேறு இறப்பை குறைக்க, போதிய டாக்டர்களை நியமிக்காமல், 'வார் ரூம்' மட்டும் அமைப்பது தீர்வாகாது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள, 2,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போது, அரசு மருத்துவமனைகளில், சிறப்பு முதுநிலை டாக்டர்களுக்கு பதிலாக, முதுநிலை பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், நோயாளிகள் பாதிக்கப்படக்கூடும். எனவே, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.