உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறந்தநிலை பல்கலை அங்கீகாரத்தை காக்க பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திறந்தநிலை பல்கலை அங்கீகாரத்தை காக்க பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை:'யு.ஜி.சி., விதிகளுக்கு எதிராக, வேறு பல்கலைகளின் கல்லுாரிகளுக்கு பேராசிரியர்களை இடமாறுதல் செய்யக் கூடாது' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பேராசிரியர்கள், இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லுாரிக்குச் சென்று படிக்க வாய்ப்பு இல்லாதவர்களும் பட்டப்படிப்பை முடிக்கும் வகையில், கடந்த 2002ல் தமிழக அரசால் துவக்கப்பட்டது, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. இதில் தற்போது, 32 துறைகளுடன், தமிழகம் முழுதும் 12 மண்டல மையங்கள் செயல்படுகின்றன. இதுவரை, 6.30 லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் எம்.பில்., - பி.எச்.டி.,யையும் முடித்துள்ளனர். இங்குள்ள துறைகள், தொலைதுார மையங்கள், மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 105 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 37 பேராசிரியர்கள்தான் உள்ளனர். கடந்தாண்டு, 43 தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இங்குள்ள பேராசிரியர்களை, வேறு பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து, கடந்த இரண்டு நாட்களாக, பேராசிரியர்கள் பல்கலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., விதிகளின்படி, பல்கலையில் பணியாற்ற வேண்டிய எண்ணிக்கையில், தற்போது பேராசிரியர்கள் இல்லை.அதனால், மாணவர் சேர்க்கை, கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநுால் உருவாக்கம், இணையவழி வகுப்பு நடத்துதல், வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்துதல், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், நிர்வாகப் பணிகள் உள்ளிட்டவற்றால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தற்காலிக உதவி பேராசிரியர்களை, பற்றாக்குறை உள்ள மற்ற பல்கலைகளின் கல்லுாரிகளில் பணி செய்ய, துணை வேந்தர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், நிரந்தர பேராசிரியர்களையும் வேறு கல்லுாரிகளுக்கு அனுப்ப சம்மதிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விபரீதமான முடிவால், பல்கலை அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்கலையை காக்க, கடந்த இரண்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை, துணை வேந்தர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உள்ளிட்டவற்றின் பேராசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி