வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சேகர் பாபு எங்கே?
திருப்பரங்குன்றம்:மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி, 144 தடையை மீறி கோவிலுக்குள் ஒன்றுக்கூடிய பக்தர்கள் 'குன்றத்து மலை குமரனுக்கே', 'வீரவேல் வெற்றிவேல்' என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறியதாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்திலும், வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி உயிர்ப்பலி கொடுக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோயிலின் புனிதத் தன்மையை பாதிப்பதாக கூறி, ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மலையை 'சிக்கந்தர் மலை' எனச் சொல்லி, சில அமைப்புகள் ஆக்கிரமிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து முன்னணி, நேற்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, போலீசார் அனுமதி மறுத்தனர். மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதலே திருப்பரங்குன்றத்தில் வசிக்காதவர்களை போலீசார் வெளியேற்றினர். மதுரை மாநகர் முழுதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து தெருக்களின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ரயிலில் திருப்பரங்குன்றம் வந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திலும், வீட்டிலும் சிறை வைக்கப்பட்டனர். மதுரை ஆதினமும் மடத்தை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டது. அதேநேரம் பக்தர்கள் தனித்தனியாக திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று வழிபட போலீசார் அனுமதித்தனர். அப்படி சென்று தரிசனம் செய்தவர்கள், மதியம் 12:30 மணிக்கு சஷ்டி மண்டபம் வழியாக வெளியே வந்தனர். அப்படி வந்த 500க்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபம் முன்பு அமர்ந்து 'குன்றத்து மலை குமரனுக்கே', ' வீரவேல் வெற்றி வேல்', 'காப்போம் காப்போம் முருகன் மலையை காப்போம்' என கோஷமிட்டனர். இதில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இதையடுத்து, அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். நேற்று மதியம் வரை, மொத்தம் பெண்கள் உட்பட 485 பேரும், திருப்பரங்குன்றத்திற்கு தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட 731 பேரும் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலையை காக்க, ஹிந்து அமைப்பினர் அறிவித்த போராட்டத்தைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் மதுரை நோக்கி புறப்பட்ட ஹிந்து அமைப்பினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதோடு, பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பல ஊர்களிலும், வீட்டுச் சிறை மற்றும் கைது என்ற பெயரில் ஹிந்து அமைப்பினருக்கு போலீசார் கெடுபிடி காட்டினர். மங்கள வேல் ஏந்தி திருப்பரங்குன்றம் புறப்பட்ட திருப்பூர் மாவட்ட ஹிந்து முன்னணியினரோடு, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியனும் புறப்பட, அவரை போலீசார் கைது செய்தனர். பின் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடப்பது முற்றிலும் ஹிந்துக்கள் விரோத ஆட்சி. தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலை முற்றிலும் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பு உள்ளது. மலையில், பிற மதத்தவர் அத்துமீறலை, இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ., என மக்கள் பிரதிநிதிகள், அங்கு சென்று பிரச்னையை துாண்டிவிடுகின்றனர். அமைதியாக, அறவழியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. எங்களையும், முருக பக்தர்களையும் அடக்கி ஆளும் நடவடிக்கை தான் நடக்கிறது. இந்த ஹிந்து விரோத ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவர். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலையை காக்க ஹிந்து அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, போடப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக் கோரியும், போராட்டத்துக்கு அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மதுரை சுந்தரவடிவேல் தாக்கல் செய்த அவசர பொதுநல மனு:மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசம் திருவிழா ஜன.29 ல் துவங்கி பிப்.11 வரை நடைபெறுகிறது. சிலர் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க மற்றும் ஆடு, கோழிகளை பலியிட முயற்சித்து திட்டமிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். இதிலிருந்து ஹிந்துக்களின் புனிததலமான மலையை பாதுகாக்க வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் பிப்.4 ல் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. பாரபட்சமாக போலீசார் அனுமதி மறுத்தனர். பிப்.3 முதல் பிப்.4 வரை போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது; இரு நாட்களிலும் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் பிப்.2 ல் உத்தரவிட்டார். இதனால் பக்தர்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. 144 தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும். தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்கக்கூடாது என கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மதுரை முருகன் தாக்கல் செய்த மற்றொரு அவசர பொதுநல மனுவில், ''திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களை தடுக்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதே போல, ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச் செயலர் கலாநிதி மாறனும் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ''திருப்பரங்குன்றம் கந்தர் மலையை காக்க, பிப்.4 ல் மதியம் 3:00 மணிக்கு ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தனர். அதை ரத்து செய்து அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்,'' என கலாநிதி மாறன் கோரியிருந்தார். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு, ''144 தடையுத்தரவு அமலில் உள்ளபோது ஒரு (அண்ணாதுரை நினைவுநாள்) ஊர்வலத்திற்கு எப்படி அனுமதியளிக்கப் பட்டது,'' என கேள்வி எழுப்பியது. பின், ''பழங்காநத்தத்தில் பிப்.4 ல் மாலை 5:00 முதல் 6 :00 மணிவரை அமைதியான முறையில், ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தலாம். எவ்வித ஆட்சேபகரமான கோஷங்களையும் எழுப்பக்கூடாது. அதை, போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால் அதற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர் பிப்.19 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அந்த உத்தரவின்படி, ஹிந்து அமைப்பினர் மதுரை பலங்காநத்தத்தில் போராட்டம் நடத்தினர்.
சேகர் பாபு எங்கே?