கலைமகள் சபா சொத்துக்கள் விபரம் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவு
சென்னை: 'கலைமகள் சபா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை ஆய்வு செய்து, முழு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, புதுச்சேரியின் வருவாய் துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர் முறைகேடு, தவறான நிதி நிர்வாகத்தால், கலைமகள் சபா பிரச்னையில் சிக்கியது. அவற்றின் சொத்துக்களை நிர்வகிக்க உயர் நீதிமன்றம் நிர்வாகிகளை நியமித்தது. பின், கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலரை, சிறப்பு அலுவலராக நியமிக்க, 2021ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் கே.ஆர்.கமலநாதன், பி.சின்னத்துரை, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற உத்தரவின்படி, கலைமகள் சபா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களில், ஆக்கிரமிப்பில் உள்ளவை, இல்லாதவை குறித்து, விருதுநகர், திருவண்ணாமலை உட்பட 14 மாவட்ட கலெக்டர்கள், தனித் தனியே அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 'கலைமகள் சபா பெயரில் உள்ள சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யக் கூடாது; இது, தடை செய்யப்பட்ட சொத்துக்கள்' என, 155 சார் - பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என, பதிவுத்துறை ஐ.ஜி.,யும் தெரிவித்தார். இந்த சொத்துக்கள், கலைமகள் சபாவின், 6.50 லட்சம் உறுப்பினர்களின் நலன் சார்ந்தது என்ப தால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் முழுதும் உள்ள சொத்துக்கள் தொடர்பாக, யாராவது சிவில் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்குகளை சிவில் கோர்ட் நீதிபதிகள் விசாரணைக்கு எடுக்கக்கூடாது. இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் தகுந்த சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள கலைமகள் சபா சொத்துக்களை ஆய்வு செய்து, அதன் முழு விபரங்களை, புதுச்சேரி வருவாய் துறை செயலர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.