மேலும் செய்திகள்
4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு
4 minutes ago
ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்
6 minutes ago
ஸ்ரீ குமரனில் செயின் மேளா
7 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரியில், 2018 முதல் பொங்கல் இலவச வேட்டி - சேலைக்கு பதில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 'வேட்டி - சேலைக்கு பதில், இனி பணமாக பொதுமக்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என, இந்தாண்டு துவங்கப்பட்ட புதிய திட்டம் போல 'இன்ஸ்டா' சமூக வலைதள பக்கத்தில் புதுச்சேரி கவர்னர் அறிவித்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களின் போது, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி - சேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ஆண்களுக்கு வேட்டி அல்லது லுங்கி, பாலிஸ்டர் சட்டை, பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டு வந்தது. காங்., ஆட்சியில், அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்கு இடையேயான உரசல் காரணமாக, நேரடி பண பரிமாற்ற திட்டம் அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகளும் மூடப்பட்டு, நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. கடந்த 2017 முதல் வேட்டி - சேலைக்கு பதில், 500 ரூபாய் பணமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2021ல் ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பொங்கல் வேட்டி - சேலைக்கு பதில், தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறது. இதேபோல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி யூனியனில் 1.43 லட்சம் வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு 500- ரூபாய் மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு 1,000- ரூபாய் வீதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் வாயிலாக, பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்கு 14 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. இந்தத் திட்டம் 2018ம் ஆண்டு முதல் நேரடி மானிய திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தான் கவர்னர் இன்ஸ்டாகிராமில் புதிய தகவல் போல் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் இனி இலவச ஆடை வழங்கல் இல்லை. அதற்கு பதிலாக ஆடைகளுக்கான பண உதவி, நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வழங்கப்படும். முந்தைய நடைமுறையின்படி ஒரே மாதிரியான வேட்டி - சேலை பெற, வரிசையில் காத்திருக்க வேண்டும். புதிய நடைமுறையின்படி ஆடைகளுக்கான பண உதவி நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால், துணியில் உங்களுக்கு பிடித்த நிறம், வடிவத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். அத்துடன் பண்டிக்கைக்கு முன்பே பணம் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும். இதில், இடைத்தரகர்கள் இல்லை. 100 சதவீதம் வெளிப்படைத்தன்மை. புதிய விதிகள்; புதிய மகிழ்ச்சி. இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார். ஆதிதிராவிடர் நலத்துறையில், 2015 - 16ம் ஆண்டு முதல் பொங்கல், தீபாவளி பண்டிக்கைக்கு நேரடி மானிய திட்டத்தின் கீழ், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சமூக நலத்துறை வாயிலாக தீபாவளி பண்டிகையின் போது, ஆதிதிராவிடர் அல்லாத இதர பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், கவர்னர் கைலாஷ்நாதன் எதற்காக இதை புதிய அறிவிப்பு போல வெளியிட்டார் என, மக்களிடமும், அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பத்திற்கு காரணம் இது தான்! புதுச்சேரியில் 3.62 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், அரசு ஊழியர் உட்பட வருமான வரி செலுத்தும், 1.55 லட்சம் மஞ்சள் கார்டுதாரர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. மீதி இருக்கும், 2.06 லட்சம் சிவப்பு கார்டுதாரர்களில், வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்போர் பிரிவில் வருவோருக்கு பொங்கல் பண்டிகைக்கும், ஆதிதிராவிடர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைக்கும் இலவச வேட்டி - சேலைக்கு பதில் பணம் வழங்கப்படுகிறது. இதற்கான நிரந்தர செயல் வழிமுறைகள் வகுக்கப்படவில்லை. மாறாக ஆண்டுதோறும், வேட்டி - சேலை வினியோகத்திற்கு என, 14 கோடி ரூபாய் நிதி கேட்டு, நிதித்துறைக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும். வேட்டி - சேலைக்காக பணம் பெற்று, அவற்றை கொள்முதல் செய்வதற்கு பதில், மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். இந்த முறையும் அவ்வாறு அனுமதி கேட்டு வைக்கப்பட வேண்டிய கோப்புக்கு பதில், நேரடியாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் திட்டம் என, புதிய கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்ப, நிதித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு தயாரிக்கப்பட்ட கோப்பு, கவர்னரின் ஒப்புதலுக்கு சென்ற நிலையில், இதை புதிய திட்டம் போல அறிவித்து கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார் என்கின்றனர் தகவலறிந்த அதிகாரிகள்.
4 minutes ago
6 minutes ago
7 minutes ago