கேழ்வரகு கொள்முதல் துவக்கம் டன்னுக்கு ரூ.48,860 விலை
சென்னை: 'தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படும். இதற்காக டன்னுக்கு 48,860 ரூபாய் வழங்கப்படும்' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவரது செய்திக் குறிப்பு: தமிழக விவசாயிகளிடம், கடந்த மூன்று ஆண்டுகளில், 6,453 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, 3,578 விவசாயிகளுக்கு 26.48 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவம் இம்மாதம் 1ம் தேதி துவங்கி 2026 ஜன., 31ல் நிறைவடைகிறது. விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு டன்னுக்கு, 48,860 ரூபாய் என்ற ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில், நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறந்து, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டில் கொள்முதல் விலையான டன்னுக்கு, 42,900 ரூபாய் என்பதை விட, இந்தாண்டு டன்னுக்கு 5,960 ரூபாய் கூடுதலாகும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த கேழ்வரகை, வாணிப கழக கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.