உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் நுாறு சதவீத இழப்பீடு வழங்க வேண்டும்: ஐகோர்ட்

சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் நுாறு சதவீத இழப்பீடு வழங்க வேண்டும்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக, குவாரி ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும்' என்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2012 மே 18ல் சுற்றறிக்கை பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கல் குவாரி உரிமதாரர்கள், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என, 2015ல் அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 2016 ஜன., 15 முதல் 2017 ஜன., 10 வரையிலான ஓராண்டு காலத்தில், குவாரிகளில் இருந்து வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து, குவாரி உரிமம் பெற்றிருந்த சேலத்தை சேர்ந்த மாதவகண்ணன் உட்பட 82 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகளை, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். தமிழக அரசுதரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் வி.சந்திரசேகரன், வெங்கடசாமி பாபு, மூத்த வழக்கறிஞர் ஜெயகணேசன், ஸ்ரீனிவாசமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர்.மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், 'குவாரி சட்டவிரோதமானது அல்ல. அவ்வாறு இருக்கும்போது, வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படிகோர முடியாது. 5 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைவான குவாரிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற எந்தவொரு வழிமுறையும் வெளியிடவோ அல்லது அறிவிக்கவோ இல்லை' என்றனர்.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில், 'சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னரே, 5 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைவான குவாரி ஒப்பந்தங்களை, மாநிலங்கள் வழங்க வேண்டும் என, 2012ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என கூறப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது, ஒப்புதல் இல்லாமல் கல் குவாரி நடத்தியது சட்ட விரோதம். எனவே, வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது.இழப்பீட்டு தொகையை செலுத்தும்படி, அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதேநேரம், குவாரி உரிமதாரர்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்து விட்டு, மீத தொகையை இழப்பீடாக செலுத்தலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு, அரசு தனிப்பட்ட முறையில் மூன்று வாரங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகையை, மனுதாரர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Varadarajan Nagarajan
ஜூன் 07, 2025 07:59

இதுபோன்ற வழக்குகளில் அவற்றை கண்காணிக்கவேண்டிய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு முறையாக வேலைசெய்யாமல் இருக்கும் அதிகாரிகளும் இதற்கு பொறுப்பாவார்கள். எனவே நீதிமன்றம் அதற்கு உண்டான தண்டனையையும் சேர்த்தே அளிக்கவேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 07:22

ஏராளமாக வெட்டி எடுத்து இருக்கிறார்கள் - 100% தண்டம் என்பது மிகமிக குறைவுதான்.


V Venkatachalam
ஜூன் 07, 2025 11:07

ஏராளமான லஞ்சப் பணம் திருட்டு தீய முக காரனுக்கு போயிருக்குமே. அவனுங்க எவ்வளவு கற்கள் வெட்டி எடுத்தானுங்க ன்னு கரீட்டா கணக்கு வச்சிருப்பானுங்க. குவாரிக்காரனுங்க கணக்கெல்லாம் துண்டு சீட்டில் தான் இருக்கும். மதுரை பி ஆர் பழனிசாமி கல் குவாரியில் அடித்த கொள்ளை 16000 கோடின்னு அப்பவே சொன்னாங்க. TAMIN அதிகாரிகளும் அதற்கு கூட்டு களவாணிகள்ன்னு சொன்னாங்க. இவன்களும் அந்த அளவுக்கு கொள்ள அடிச்சிருப்பானுங்க. ஆனா திருட்டு தீய முக தலைமைக்கு ஒழுங்கா கப்பத்தை கட்டியிருக்க மாட்டானுங்க. அதனால இது வெளிச்சத்துக்கு வந்ததிருக்கு. இல்லாட்டி இது யாருக்குமே தெரியாம போயிருக்கும்.


புதிய வீடியோ