தொலை தொடர்பு கம்பி வடம் துண்டிப்பு அதிகரிப்பு; ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
மதுரை : ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் தண்டவாளம் அருகே பூமிக்கு அடியில் செல்லும் தொலைதொடர்பு கம்பி வடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, 2 ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையே செல்லும் இக்கம்பி வடம் ஒரு தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில் இயக்கத்தை தடுக்கவும், ரயில் வருவதற்கு முன் குறித்த நேரத்தில் ரயில்வே கேட்களை மூடவும் பயன்படுகிறது.இந்நிலையில் தனியார், உள்ளாட்சி அமைப்புகள் தங்களது திட்டப் பணிகளின் போது இத்தகைய கம்பி வடத்தை துண்டிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.சமீபத்தில் திருப்பரங்குன்றம் அருகே உள்ளாட்சி அமைப்பினர் இறந்த கால்நடைகளை புதைக்கும் முயற்சியில் கம்பி வடத்தை துண்டித்தனர்.இதில் சம்பந்தப்பட்ட மண் அள்ளும் இயந்திர ஓட்டுனரை ரயில்வே பாதுகாப்பு படை கைது செய்தது. இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ளாட்சி அமைப்பு சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் கம்பி வடம் துண்டிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறுகையில் 'ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தண்டவாளம் அருகே பணிகளை மேற்கொள்ளும் தனியார், உள்ளாட்சி அமைப்பினர் ரயில்வே அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு பணியை மேற்கொண்டால் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம். மீறினால் இந்திய ரயில்வே சட்டப் பிரிவு 154ன் படி ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். துண்டிக்கப்பட்ட கம்பி வடத்திற்கான நஷ்ட ஈடும், பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும்' என எச்சரித்தது.