உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி மீது டில்லி போலீசில் ராமதாஸ் புகார்!

அன்புமணி மீது டில்லி போலீசில் ராமதாஸ் புகார்!

சென்னை : பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள மோதலின் உச்சகட்டமாக, தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக அன்புமணி மீது, டில்லி போலீசில் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து, ராமதாஸ் தரப்பு இன்று முடிவெடுக்க உள்ளது. பா.ம.க.,வில் தந்தை ராமதாஸ் --- மகன் அன்புமணி மோதலை தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், பா.ம.க., தலைவராக அன்பு மணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. போராட்டம் இதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் கமிஷனை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தரில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கடந்த 4ம் தேதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டில்லி போலீஸ் துணை கமிஷனரிடம், ராமதாஸ் சார்பில் பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று புகார் மனு அளித்தார். மனுவில் ராமதாஸ் கூறியுள்ள தாவது: பா.ம.க., தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், அவர் தாக்கல் செய்த போலி ஆவணங்கள் அடிப்படையில், அவரை தலைவராக தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. போலி ஆவணங்கள் வாயிலாக, பா.ம.க., தலைமை அலுவலகத்தின் முகவரியையும், தேர்தல் கமிஷனில் அன்புமணி மாற்றியுள்ளார். இது, பா.ம.க., நிறுவனரான என்னிடம் இருந்து கட்சியை பறிக்கும் முயற்சி. இது, ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது. போலி ஆவணங்கள் அளித்த அன்புமணியிடம் விசாரணை நடத்த வேண்டும். அன்புமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. எனவே, தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த உண்மை குற்றவாளிகளை தண்டிக்கவும், நீதி கிடைக்கவும், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். புகார் மனு அளித்த பின், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கையெழுத்திட்டுள்ள புகார் கடிதத்தை, டில்லி துணை கமிஷனரிடம் வழங்கியுள்ளோம். கடந்த ஐந்து மாதங்களாக, எங்கள் தரப்பில் உண்மையான ஆவணங்களை அளித்தும், ராமதாசுக்கு தேர்தல் கமிஷன் துரோகம் செய்துள்ளது. சதி ஒரு தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டால், தேர்தல் கமிஷன் மீது யாருக்கும் நம்பிக்கை வராது. தேர்தல் கமிஷனரும், அன்புமணியும் கூட்டு சேர்ந்து, இந்த சதியை செய்துள்ளனர். எனவே, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த கேட்டுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சை ராமதாஸ் தான் நடத்துவார். தற்போதுள்ள பிரச்னை மற்றும் சின்னம் தொடர்பாக, சிவில் நீதிமன் றத்தை அணுகுவது குறித்து இன்று முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். ஜி.கே.மணி மீது அவதுாறு வழக்கு பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு அளித்த பேட்டி: அன்புமணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், எந்த முகாந்திரமும் இல்லாமல், டில்லி போலீசில் ஜி.கே.மணி பொய் புகார் கொடுத்துள்ளார். இது, சட்ட விரோதமானது; உண்மைக்கு புறம்பானது. பா.ம.க.,வை கைப்பற்றும் உள்நோக்கத்துடன் ஜி.கே.மணியும், அவரது மகனும் செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக அவர் தன் கருத்துகளை திரும்ப பெற வேண்டும்; பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வோம். பா.ம.க.,வில் பிரச்னை ஏற்பட்ட பின் எடுத்த அனைத்து முயற்சிகளிலும், அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதனால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அன்புமணி மீது களங்கம் கற்பித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை