சென்னை :பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்டோருடன், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நேற்று ஆலோசனை நடத்தினார்.பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ராமதாசால் நீக்கப்பட்ட நிர்வாகிகள், அதே பொறுப்பில் நீடிப்பதாகவும், கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவும், சேர்க்கவும் தலைவரான தனக்கே அதிகாரம் என்றும் அன்புமணி அறிவித்து உள்ளார்.பா.ம.க., நிர்வாகிகள், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் அன்புமணி பக்கம் இருந்தாலும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர், ராமதாஸ் பக்கமே உள்ளனர். திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த இவர்களுடன் நேற்று, ராமதாஸ் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அன்புமணிக்கு ஆதரவாக உள்ள, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க முக்கிய நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாக, ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.பின், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, ''ராமதாஸ்தான் தலைவர். அவர் வலுவுடன் இருக்கிறார். அப்பா - - மகன் இடையே நடக்கும் பிரச்னையில், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. வன்னியர் சங்கத்தில் சரியில்லாத நிர்வாகிகளுக்கு பதிலாக, புதியவர்களை நியமிக்க இருக்கிறோம்,'' என்றார்.