உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளை திரட்டி போராட்டம் தி.மு.க., அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

விவசாயிகளை திரட்டி போராட்டம் தி.மு.க., அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை,: ''சென்னையில் விவசாயிகளை திரட்டி, பா.ம.க., முற்றுகை போராட்டம் நடத்தும்,'' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.பா.ம.க.,வின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், திருவண்ணாமலையில் நேற்று உழவர் பேரியக்க மாநில மாநாடு நடந்தது. அதில், ராமதாஸ் பேசியதாவது:தொழில் வளர்ச்சி என்ற முறையில், விளை நிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் நலனுக்காக, தி.மு.க., அரசு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது தி.மு.க., அரசு. விவசாயிகளை காக்க முடியாத அரசு, ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது. விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க., அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் துாக்கி எறிய தயாராகி விட்டனர். ஏர் பிடிக்கும் விவசாயிகள் போர் குணத்துடன் இருக்க வேண்டும், பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்ட குணமே அவர்களின் விவசாய வளர்ச்சிக்கு காரணம். மற்ற மாநிலங்களை விட அவர்களுக்குதான் அதிக விலை கிடைக்கிறது.விவசாயிகளின் தலைவராக இருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சரண்சிங் பிரதமராகவும் இருந்தவர். விவசாயிகள் நலனுக்காக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தவர். அவர் எதை சொன்னாலும், அதை விவசாயிகள் கேட்டனர். தமிழகத்தில் ஏற்படும் வறட்சி என்பது, மனிதர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படுவது. தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தாவிட்டால், தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஆறுகளில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும். சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகில், விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். வரும் 2025ல் போராட்ட தேதியை அறிவிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:முதல்வர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலாளிகள் பக்கம் தி.மு.க., அரசு உள்ளது. பா.ம.க.,வின் போராட்டத்தால், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டன.விளைநிலங்களை அழித்து அறிவுசார் நகரம், விமான நிலையம் அமைப்பதை ஏற்க முடியாது. சென்னைக்கு அருகில் பரந்துாரில் விமான நிலையம் கண்டிப்பாக அமைக்கக்கூடாது; திருப்போருரில்தான் அமைய வேண்டும். விவசாயிகள் பாதிக்கும் வகையில், அரசு எந்த திட்டம் தீட்டினாலும், அதை முழு வேகத்தில் பா.ம.க., எதிர்க்கும். எப்பாடுபட்டாவது விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை