ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்
சென்னை:சமூக வலைதளத்தில், பெண் வழக்கறிஞர் மற்றும் ஜீயர்கள் குறித்து, அவதுாறு கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் கைதான, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், தன் சமூக வலைதளத்தில், 'சனாதனத்தை பாதுகாத்த உதயநிதி' என்ற தலைப்பில், ஸ்ரீபெரும்புதுார் ஜீயருடன் பேசிய உரையாடல் அடங்கிய, வீடியோவை பதிவிட்டார். தன் அனுமதியின்றி உரையாடலை வெளியிட்டு, பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த, ரங்கராஜன் நரசிம்மன் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை மத்திய குற்றப்பிரிவில், ஜீயர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.அதன்படி, ரங்கராஜன் நரசிம்மன் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 15ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசில், பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரிலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதேபோல், தன் தந்தை கைது நடவடிக்கையை, சட்டவிரோதம் என அறிவித்து, அவரை விடுவிக்க கோரி, ரங்கராஜன் நரசிம்மனின் மகன் முகுந்தன் ரங்கராஜன் என்பவரும், மனு தாக்கல் செய்தார்.இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'சமூக வலைதளத்தில் பெண்களுக்கு எதிராக, மோசமான கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது; நேரடியாக, மறைமுகமாக ஜீயர்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது' என்ற நிபந்தனைகளுடன், ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.உரிய விதிகளை பின்பற்றாமல் கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி, அவர் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு, போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.