உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால் வளைந்ததால் நடக்க முடியாத குழந்தைக்கு அரிதான ஆப்பரேஷன்

கால் வளைந்ததால் நடக்க முடியாத குழந்தைக்கு அரிதான ஆப்பரேஷன்

சென்னை:கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு, 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்னர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த சின்ராஜ் - பவானி தம்பதியின், ஒன்றரை வயது குழந்தை தியாஷ் சந்திரன். வலது கணுக்காலில் பிரச்னை ஏற்பட்டு, கால் வளைந்ததால் நடக்க முடியாத நிலையில் இருந்த குழந்தையை, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மிகவும் அரிதானது

மருத்துவமனை இயக்குநர் மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்தகுமார் வழிகாட்டுதல்படி, கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை தலைவர் ஸ்ரீதர், மயக்கவியல் டாக்டர் குமார் அடங்கிய மருத்துவ குழுவினர், குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.இதுகுறித்து, மருத்துவமனையின் கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:குழந்தையின் வலது காலில் பிரச்னை ஏற்பட்டு, கால் வளைந்து, நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் அரிதானது; கஷ்டமானது. ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்தக்குழாய் எல்லாம் மிகவும் சிறியதாக இருக்கும். அந்த ரத்தக் குழாய்களை ஒன்று சேர்க்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தைக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை செய்வது முதல் முறையாகும்.வளைந்த காலில் கம்பி பொருத்தி நேராக்கி, பற்றாக்குறையாக இருந்த சதைகளுக்காக, இடது தொடையில் இருந்து திசுக்களை எடுத்து வைத்து, ரத்தக் குழாய்கள், நரம்புகளை இணைத்து, குழந்தையின் பிரச்னை சரி செய்யப்பட்டது. இதற்காக, தலை முடியை விட மெல்லிய தையல் போடப்பட்டுள்ளது.

6 மணி நேரம்

இந்த அறுவை சிகிச்சை, 6 மணி நேரம் நடந்தது. மூன்று வாரம் குழந்தையை டாக்டர்கள் கண்காணிப்பர். பின், காலில் பொருத்தப்பட்டுள்ள கம்பியை எடுத்து விடுவோம். அதன்பின், குழந்தை நடக்க துவங்கும். குழந்தை வளர வளர காலில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சதையும் வளரும். இப்பிரச்னை மீண்டும் குழந்தைக்கு வராது.முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு, 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி