உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை

 ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை

சென்னை: புதிய ரேஷன் கார்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், 1.71 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதிகாரிகள் ஒப்புதல் அளித்தும், 52,710 ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப் படாமல் உள்ளன. தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், மானிய விலை உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். தமிழகத்தில் தனி சமையல் அறையுடன் வசிப்பவருக்கு, உணவு வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டு வழங்கப் படுகிறது. புதிதாக திருமணமாகி, ஒரே வீட்டில் பெற்றோருடன் வசிப்போரும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் தகுதியான பயனாளியா என, தகவல் தொழில்நுட்ப துறை கீழ் இயங்கும், மின் ஆளுமை முகமை வாயிலாக, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இம்மாதம், 27ம் தேதி நிலவரப்படி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் பெறப்பட்டதில், 1,70,774 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ரேஷன் கார்டு கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களில், 52,710 பேருக்கு ரேஷன் கார்டு வழங்க, அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், இன்னமும் அவர்களுக்கு கார்டு அச்சிட்டு வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, ரொக்க பணத்துடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு, புதிய ரேஷன் கார்டை விரைவாக வழங்க வேண்டும் என, அரசுக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்