| ADDED : பிப் 01, 2024 12:30 AM
சென்னை:பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியலில் விடுபட்டவர்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது, பொருட்களை வழங்காமல் ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைக்கு சென்று, கருவியில் விரல் ரேகையை பதிவு செய்தும் பொருட்கள் தரவில்லை; ஊழியரிடம் கேட்டால், ஒப்புதல் வரவில்லை என்று பதில் சொல்கின்றனர்' என்றனர்.ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'சிலரின் விரல் ரேகையை கருவியில் பதிவு செய்யும் போது, 'எச்சரிக்கை, எச்சரிக்கை' என்று வருகிறது. பொருட்கள் வழங்க ஒப்புதல் வருவதில்லை. அந்த நபரின் பெயர், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் வழங்கிய போது விடுபட்ட பெயர்களில் இருந்தது' என்கின்றனர். கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்டுக்கு உரியவர்கள் வருவதை உறுதி செய்யவே, கருவியில் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால், முறைகேடு செய்ய முடியாது. ஒவ்வொரு கார்டுதாரருக்கும் உரிய பொருட்கள் சரியாக வழங்கப்படுகின்றன. எனவே, வேண்டுமென்றே மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்கள் தர மறுத்தால், அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.