உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

மதுரை: மகளிர் உரிமைத்தொகையே மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும் நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.ஆயிரம் வழங்குவது அநீதி என தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் (டாக்பியா) நேற்று மாநில அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (அக்., 7) முதல் ரேஷன் கடைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர். மதுரையில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் கணேசன், செயலாளர் பாருக் அலி, கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 4400 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ.6000 முதல் ரூ.12 ஆயிரம் வரையான சம்பளத்தில் தலா ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக நியமிக்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு 50 கிலோ மூடை வருவதற்கு பதிலாக 48 கிலோ, அதற்கும் குறைவான எடையில் தான் வருகிறது. வாணிப கழகத்தில் மின்னணு தராசு(ப்ளூடூத் முறை) முறையில் இணைக்கப்பட்டால் தான் எங்களுக்கும் சரியான எடையில் மூடைகள் கிடைக்கும். அங்கே 'ப்ளூடூத்' இணைக்காமல் ரேஷன் கடைகளில் மட்டும் நுகர்வோருக்கு 'ப்ளூடூத்' முறையில் சரியான எடையில் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். எங்களுக்கே எடை குறைவாக கிடைக்கும் போது நாங்கள் எப்படி சரியான முறையில் எடையிட முடியும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், கர்ப்பிணிகள் தனியாக ஒரு கடையை நிர்வகிப்பது கடினம். கிராமப்புற ரேஷன் கடைகளில் விற்பனையாளர் ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளதால் 'அவுட்சோர்சிங்' முறையில் தற்காலிக சம்பளத்தில் எடையாளரை நியமிக்க வேண்டும். எங்களுக்கான சம்பள உயர்வுக்கு ஒப்பந்தம் செய்து ஐந்தாண்டுகளாகிறது. பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஏழு சுற்றறிக்கைகள் பெறப்பட்டும் முறையான சம்பளம் வழங்கவில்லை. 15 நாட்களுக்கு முன் வந்த பதிவாளர் சுற்றறிக்கையில் வீட்டு வாடகைப்படி 10 சதவீதம் வரை அங்கீகரிக்கலாம் என்று வந்த நிலையில் மறுவாரமே சுற்றறிக்கையை ரத்து செய்ததால் சம்பள குளறுபடி ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த எங்களுக்கு ஐந்தாண்டுகளாக மாதம் ரூ.1000 தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதை ரூ.பத்தாயிரமாக உயர்த்த வேண்டும். மாநில சங்கத்தை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 7 (இன்று) முதல் காலவரையற்ற போராட்டம் தொடரும். அக்., 13ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !