உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1.35 லட்சம் கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி

ரூ.1.35 லட்சம் கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி

திருப்பூர்:நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மதிப்பு, கடந்த நிதியாண்டில், 1.35 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவைத் தொட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும், 15,117 கோடி ரூபாய் அதிகம்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பொருளாதார சுணக்கம் மறைந்த பின், கடந்த 2024 பிப்., மாதத்தில் இருந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.கடந்த ஆறு மாதங்களாக, புதிய ஆர்டர் வரத்து அதிகரித்தது. இதனால் 2024-25 நிதியாண்டில்,1.35 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளதாக, நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாகிகள் கூறுகையில், “பருத்தி நுால் மட்டுமல்லாது; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் ஏற்றுமதியாளர்கள் கால் பதித்துவிட்டனர். இதனால், புதிய ஆர்டர்கள் வருவது அதிகரித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்புமுனையாக மாறியுள்ளது,” என்றனர்.

திருப்பூர் ஏற்றுமதி: ரூ.40,000 கோடி

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 40,000 கோடி ரூபாயை எட்டுமென, கடந்த ஜன., மாதம் கணித்திருந்தோம். அதேபோல் தற்போது நடந்துள்ளது. வரும் ஆண்டுகளிலும், இத்தகைய வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைப்போம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ