ரூ.12 கோடியில் சோழகங்கம் ஏரி புனரமைப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழன் பிறந்த நாளான, ஆடி திருவாதிரை விழா, 2021 முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனின் புகழை, உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், 10 ஏக்கர் பரப்பளவில், 22.1 கோடி ரூபாயில், புதிய அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. ராஜேந்திர சோழன், தெற்காசிய நாடுகளை வெற்றி கண்டு, 1000 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், நடப்பாண்டு ஆடி திருவாதிரை விழாவையொட்டி, புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி, ராஜேந்திர சோழனால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக, மக்களின் தேவைக்காக, கங்கை நீரை கொண்டு, சோழகங்கம் ஏரியை, ராஜேந்திர சோழன் உருவாக்கினார் என்பதை, திருவாலங்காடு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம். இந்த ஏரியில், பல்வேறு மேம்பாட்டு பணிகளை, 12 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். உபரிநீர் வழி கால்வாய்களை புனரமைத்தல், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக, 1,374 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், சோழகங்கம் ஏரியை, சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை வாயிலாக, 7.25 கோடி ரூபாய் மதிப்பில், தகவல் தொடர்பு மையம், நடைபாதை, சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.