தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தகிரீர் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் கைது
சென்னை:சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற அப்துல் ரஹீம், 32. இவர், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தகிரீர் என்ற அமைப்புடன் தொடர்பில் உள்ளார்.சில மாதங்களாக தர்கா மற்றும் மசூதிகளுக்கு சென்று, அமைப்பு குறித்து பேசி ஆட்களை சேர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன், தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று ஆட்களை திரட்டி, அமைப்பு குறித்து பேசியுள்ளார். இதற்கு, பள்ளிவாசல் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து அப்துல் ரஹீமை வெளியேற்றி உள்ளனர். இந்நிலையில், கடந்த செப்., 15ல், தண்டையார்பேட்டை நேஜாஜி நகர், 3வது தெருவில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் சிலர் வாழ்த்து தெரிவித்ததால், அவர்களை பழிவாங்க வேண்டுமென, அப்துல் ரஹீம் கத்தியுடன் சுற்றித் திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சென்னை ஆர்.கே.நகர் போலீசார், அப்துல் ரஹீமை கத்தியுடன் நேற்று கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், பயங்கரவாத அமைப்பு புத்தகங்கள், குஜராத் கலவரம் தொடர்பான புத்தகங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவு புத்தகங்கள் சிக்கின; அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.