வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பட்டாவில் இருப்பதுபோல டவுன் சர்வே நகலில், நிலத்தின் வரைபடம் இருப்பதில்லை. ஆகவே, டவுன் சர்வே நகலுடன் நில அளவைப் படம் (FMB sketch) சேர்த்து இருந்தால் அதனை பட்டாவாக ஏற்று கட்டிட அனுமதி தர வேண்டும்.
சென்னை : 'டவுன் சர்வே' எனப்படும் நகர நில அளவை முடிக்கப்பட்ட இடங்களில் வழங்கப்படும் டி.எஸ்.எல்.ஆர்., ஆவணத்தை, கட்டட அனுமதி வழங்கும் துறைகள் பட்டாவாக ஏற்க மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மாநகராட்சிகள், நகராட்சிகளில், 'டவுன் சர்வே' எனப்படும் நகர நில அளவை முறையில், நிலங்கள் அளக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், நகர்ப்புற நிலங்களுக்கு புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்காக, நிலத்தின் சர்வே எண், அளவு, வகைப்பாடு, உரிமையாளர் பெயர், தீர்வை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய டி.எஸ்.எல்.ஆர்., ஆவணம் வழங்கப்படுகிறது; இணையதளத்திலும் இந்த ஆவணம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. டவுன் சர்வே முடிந்த இடங்களில், டி.எஸ்.எல்.ஆர்., அறிக்கையை பட்டாவாக கருத வேண்டும் என, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில, நில விற்பனை பதிவு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, டவுன் சர்வே அறிக்கையை பட்டாவாக ஏற்க, சில அரசு துறைகள் மறுப்பதால், பொது மக்கள் கட்டட அனுமதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் தமிழக துணை தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: டி.எஸ்.எல்.ஆர்., எனப்படும் டவுன் சர்வே அறிக்கையை, பட்டாவாக கருத வேண்டும் என, அரசு உத்தரவிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சிகளே அதை மதிப்பதில்லை. கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்தால், இந்த அறிக்கையுடன், பழைய பட்டாவையும் தாக்கல் செய்ய வேண்டும் என, கட்டாயப் படுத்துகின்றனர். இதனால், டவுன் சர்வே முடிந்த இடங்களில் வீடு கட்டுவோர், அனுமதி பெற அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. டவுன் சர்வே முடிந்து, பல ஆண்டுகள் கடந்தாலும் அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சரியல்ல. அரசு கொடுத்த ஆவணத்தை ஏற்க மறுக்கும் துறைகளுக்கு, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அப்போது தான் மக்கள் பிரச்னை இன்றி கட்டட அனுமதி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டாவில் இருப்பதுபோல டவுன் சர்வே நகலில், நிலத்தின் வரைபடம் இருப்பதில்லை. ஆகவே, டவுன் சர்வே நகலுடன் நில அளவைப் படம் (FMB sketch) சேர்த்து இருந்தால் அதனை பட்டாவாக ஏற்று கட்டிட அனுமதி தர வேண்டும்.