உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலுவை பத்திரங்களில் இருந்து ரூ.400 கோடி வருவாய் ஈட்ட பதிவுத்துறை முடிவு

நிலுவை பத்திரங்களில் இருந்து ரூ.400 கோடி வருவாய் ஈட்ட பதிவுத்துறை முடிவு

சென்னை: மதிப்பு குறைபாடு போன்ற காரணங்களால், நிலுவையில் உள்ள பத்திரங்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து, 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட,மார்ச், 31 வரை சிறப்பு இயக்கம் நடத்த பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.வீடு, மனை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரத்தில் சொத்தின் மதிப்பை குறிப்பிட வேண்டும். இந்த மதிப்பு, அப்பகுதிக்கான வழிகாட்டி மதிப்புக்கு குறைவாக இருக்க கூடாது. சில இடங்களில் வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்பில், பத்திரங்களை மக்கள் தாக்கல் செய்கின்றனர். இத்தகைய பத்திரங்கள், துணை கலெக்டர் நிலையில் விசாரணைக்கு அனுப்பப்படும்.அதில், நிர்ணயிக்கப்படும் புதிய மதிப்புகளை, பத்திரத்தின் உரிமையாளர் ஏற்காமல் மேல்முறையீடு செய்யலாம். பல இடங்களில், புதிய மதிப்புகளை ஏற்காமலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமலும் உள்ளனர்.இதுகுறித்து, பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு: புதிய மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதில் வேறுபாட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தாமல் உள்ளனர். இந்த வகையில், 2024 அக்., 31 நிலவரப்படி, 36,134 பத்திரங்கள் நிலுவையில் உள்ளன. இந்த பத்திரங்கள் வாயிலாக, 400 கோடி ரூபாய் வருவாய், துறைக்கு வராமல் நிலுவையில் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, பிரச்னையை முடிக்க வேண்டும்.இப்பிரச்னையை தீர்க்க, சிறப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி, 1ல் துவங்கிய இந்த சிறப்பு இயக்கம், மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும். இதில் சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் இதில் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யார், என்ன செய்ய வேண்டும்

* சிறப்பு இயக்கம் அறிவிப்பு குறித்து, அனைத்து பத்திரதாரர்களுக்கும் கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும்* அந்த கடிதம் திரும்ப வந்தால், சம்பந்தப்பட்ட சொத்து வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதா என்பதை, வில்லங்க சான்று வாயிலாக அறிந்து, அவருக்கு கடிதம் அனுப்ப வேண்டும்* சொத்து வேறு நபர்களுக்கு விற்கப்படாத நிலையில் கடிதம் திரும்ப வந்தால், பத்திரதாரரின் சரியான முகவரியை கண்டுபிடிக்க வேண்டும்* பத்திரதாரரிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால், அந்த பத்திரத்தை எழுதிய ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரிடம் இக்கடிதத்தை கொடுத்து, வேறுபாட்டு தொகையை செலுத்த அறிவுறுத்த வேண்டும்* புதிய மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதால், வேறுபாட்டு தொகையை செலுத்த வேண்டிய நபர்களின் மொபைல் போன் எண்களை தொகுக்க வேண்டும்* பத்திர எண், நிலுவை தொகை, வட்டி உள்ளிட்ட விபரங்களை, பதிவுத்துறை தலைமையகம் வாயிலாக பத்திரதாரரின் மொபைல் போனுக்கு தகவல் அனுப்ப வேண்டும்* துணை கலெக்டர் வாயிலாக நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பு அடிப்படையில், வேறுபாட்டு தொகையை வசூலிப்பதில், கிராம நிர்வாக அலுவலர்களையும் பயன்படுத்தலாம்* வழக்கமான பத்திரப்பதிவு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
ஜன 08, 2025 07:39

Its Naked MegaLoot by Govts from People JUST for Registering a Property & Just for Approving Plots/Building Plans WITHOUT ANY Services. SHAME


R.RAMACHANDRAN
ஜன 08, 2025 07:13

இது கூடுதல் லஞ்ச லாவண்யத்திற்கு வழி வகுக்கும்.அரசு ஊழியர்கள் கடமையை நேர்மையாக ஆற்றல் லஞ்சத்திற்காக வேலை செய்வதால் குறைந்த கட்டணத்திற்கு பத்திர பதிவு செய்வதும் மேல் முறையீடுகள் தீர்வு இல்லாமல் உள்ளதும் தொடர்கிறது.


Seekayyes
ஜன 08, 2025 06:23

அப்படியும் அந்தந்த கிரையகாரர்கள் வழிக்கு வரவில்லை என்றால் பத்திரபதிவுத்துறை அந்த சொத்தை மற்றவர்களுக்கு விற்க தடைப் போட வேண்டும். இது போன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசு ஊழியர்களின் பணி நேர விரயம் தவிர்க்கப்படும்.


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:06

கறுப்புப்பணம் உருவாகும் இடம் பத்திரப்பதிவுத்துறை என்றால் அது மிகையாகாது. எந்த நிலத்துக்கும் அதன் உண்மையான பரிவர்த்தனை தொகையை சொல்லவே மாட்டார்கள். அப்படிச்சொன்னால் ஏராளமாக வரி கட்டவேண்டியிருக்கும் என்பதால் குறைத்து சொல்லி விடுவார்கள். அதிகாரிகளும் ஒரு கண்ணை மூடிக்கொண்டு தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு தலையை ஆட்டிவிடுவார்கள். பத்திரப்பதிவுக்கட்டணம் குறைவாக இருந்தால் இது போல முறைகேடு செய்ய மாட்டார்கள்.


N Annamalai
ஜன 08, 2025 05:36

இதனால் அரசுக்கு வருவாய் வரும் அதனால் ஒரு டாஸ்மாக் கடையை மூடலாம் .


முக்கிய வீடியோ