பங்களிப்பு தர ஒதுக்கீட்டாளர் தயக்கம்; 5,000 வீடுகளை ஒப்படைக்க வாரியம் திணறல்
சென்னை: பயனாளிகள் என்ற அடிப்படையில், தங்களது பங்களிப்பு தொகையை செலுத்த ஒதுக்கீட்டாளர்கள் தயங்குவதால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட, 5,000க்கும் மேற்பட்ட வீடுகளை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நிதியில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஆட்சேபகரமான பகுதிகளில் வசிப்போருக்கு பாதுகாப்பான இடங்களில் வீடு வழங்கப்படுகிறது. தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சேபகரமான இடங்களில் வசிப்போர் மட்டுமல்லாது, வாரியத்தின் பழைய குடியிருப்புகளையும் இடித்து, புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. நிபந்தனை
இத்திட்டம் வருவதற்கு முன், வாரியம் செயல்படுத்தும் திட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். அவர்களின் பங்களிப்பு தொகை சிறு தவணைகளாக வசூலிக்கும் நடைமுறை இருந்தது. தற்போது, ஒவ்வொரு வீடும் தலா, 400 சதுர அடி பரப்பளவில், 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இதற்கான செலவை, மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. இதில், பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்ச அளவுக்காவது இருக்க வேண்டும் என்பதற்காக, ஒதுக்கீட்டாளர்கள், 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இத்தொகையை செலுத்த ஒதுக்கீட்டாளர்கள் தயங்குவதால், அவர்களுக்கான வீடுகளை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரம் இல்லை
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர்ப்புற வாழ்விட வாரிய திட்டங்களில், வீட்டின் மதிப்பில் ஒரு சிறு பகுதியை பயனாளிகள் செலுத்த வேண்டும் என்பது அடிப்படை விதி. இத்தொகையை தள்ளுபடி செய்வதற்கு வாரியத்துக்கு அதிகாரம் இல்லை. ஒதுக்கீட்டாளர்களின் பிரச்னையை உணர்ந்து, அவர்கள் இத்தொகையை வங்கிக் கடன் வாயிலாக செலுத்த ஏற்பாடு செய்கிறோம். இதற்கும் ஒதுக்கீட்டாளர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். 'பங்களிப்பு தொகையை செலுத்த மாட்டோம்; வீட்டை இலவசமாக கொடுக்க வேண்டும்' என்கின்றனர். சட்ட விதிகளில் இதற்கு வழியில்லை. இதனால், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் காத்திருக்கின்றன. ஒதுக்கீட்டாளர்கள் ஏதாவது ஒரு வழியில் ஒத்துழைத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.