மேலும் செய்திகள்
வருவாய் துறையினர் வரும் 24ல் ஆர்ப்பாட்டம்
21-Apr-2025
சென்னை:''கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்,'' என, வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தெரிவித்தார். 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், சிவக்குமார் அளித்த பேட்டி:வருவாய் துறை உள்ளிட்ட, அனைத்து துறை அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படுவது ஏமாற்றும் செயல். தேர்தலின்போது, பொய்யான வாக்குறுதி அளித்து, அரசு பணியாளர்களின், 1.5 சதவீத வாக்குகளில், முதல்வர் வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகளில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மாறாக ஒன்பது மாதம், ஓராண்டு என, கால நீட்டிப்பு செய்வது வேதனையாக உள்ளது. அரசை வழிநடத்துவது நாங்கள். எனவே, முதல்வர் ஏமாற்றும் முயற்சியை கைவிட்டு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதேபோல், மற்ற துறைகளை விட, வருவாய் துறை அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை. எனவே, வருவாய் துறையை சிறப்பு துறையாக அரசு அறிவிக்க வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் உள்ள பணியிடங்களை இரட்டிப்பாக்க வேண்டும். 1980ல், 16 மாவட்டங்கள் இருந்த போது, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களே தற்போதும் உள்ளன. இதை, 38 மாவட்டங்களுக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை காரணமாக, தற்போது 10,-000க்கும் மேற்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளன. எனவே, 2026 சட்டசபை தேர்தலில், வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு பணியாளர்கள், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை, முதல்வர் தீர்மானிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
21-Apr-2025