சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15 சதவிகிதம் குறைவு
சென்னை:தமிழகத்தில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மூன்று மாதங்களில், 15 சதவீதம் குறைந்துள்ளதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நடந்த சாலை விபத்தில், 4,864 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 4,136 பேர் உயிரிழந்துள்ளனர். ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகள், 15 சதவீதம் குறைந்துள்ளன.போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியதன் வாயிலாக, 27,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள், 6,296 பேர், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வாயிலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில், 2,551 பேர், 'கோல்டன் ஹவர்ஸ்' என, அழைக்கப்படும் உயிர் காக்கும் நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.