ரவுடி நாகேந்திரன் உடல் முன் இளைய மகன் திருமணம்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், ரவுடி நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் திருமணம் செய்து கொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக, ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் மூத்த மகனான அஸ்வத்தாமனிடம், நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை, வியாசர்பாடியில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டி ருந்த நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் அஜித்ராஜ் - ஷகினா ஜோடி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2023ல் நிச்சயிக்கப்பட்ட திருமணம், பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், நேற்று நடந்தது. நாகேந்திரனின் இறுதி சடங்கிற்காக, அஜித்ராஜ் கடந்த 9ம் தேதி சிறையில் இருந்து பரோலில் வந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 4:00 மணியளவில், நாகேந்திரனின் உடல் வியாசர்பாடி, முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.