உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி விண்ணப்பம் பூர்த்தி செய்ய ரூ.10 வசூல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி விண்ணப்பம் பூர்த்தி செய்ய ரூ.10 வசூல்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய, சில இடங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனுப்பும் நபர்கள், விண்ணப்பத்திற்கு 10 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள கணக்கெடுப்பு விண்ணப்ப படிவத்தை, 'பி.எல்.ஓ.,க்கள்' என்ற ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒவ்வொரு வாக்காளரின் வீடுகளுக்கும் சென்று வினியோகம் செய்து வருகின்றனர். அந்த படிவத்தில், வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வரிசை எண், ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதி, சட்டசபை தொகுதி எண், பாகம் எண், தந்தை பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், தாய் பெயர், அவரது அடையாள அட்டை எண், துணைவரின் பெயர், அவரது அடையாள அட்டை எண் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பத்தில், 2005ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன. இது, பெரும்பாலானோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்களே அவற்றை பூர்த்தி செய்ய உதவ வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஆனால், சில இடங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்கு செல்லாமல், தங்களுக்கு தெரிந்தவர்களிடம், அரசியல் கட்சியினரிடம் விண்ணப்பத்தை வழங்கி, அதை வினியோகம் செய்யும்படி கூறுகின்றனர். அவர்கள் வீடுதோறும் சென்று, விண்ணப்பத்தை வழங்குகின்றனர். அப்போது, விபரம் தெரியாதவர்களிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய, ஒரு விண்ணப்பத்திற்கு 10 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு வீட்டிற்கு நான்கு வாக்காளர்கள் எனில், 40 ரூபாய் வசூலிக்கின்றனர். பெரும்பாலானோர் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, தங்கள் குழந்தைகள் வந்த பின் அவற்றை பூர்த்தி செய்து வழங்குகின்றனர். ஒரு சிலர் ஓட்டுரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், அவர்களிடம், 10 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை