போலீசார் சித்ரவதையால் கைவிரல்களை இழந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
சென்னை:போலீசாரின் சித்ரவதையால், இரு கைகளிலும் விரல்களை இழந்த ஆட்டோ டிரைவருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நுார் பாஷா. இவரது மகன் ஷேக் சாஹுல் ஹமீது; ஆட்டோ டிரைவர். இவரை, 2017 ஆகஸ்ட், 26ல் சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின், போலீசார் தாக்கியதில் சாஹுல் ஹமீதுக்கு ஏற்பட்ட, 90 சதவீத உடல் செயல்பாட்டின்மைக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நுார் பாஷா ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு வாதாடுகையில், ''மனுதாரரின் மகனை, 2017 ஆகஸ்ட், 26 முதல் 31ம் தேதி வரை, சட்ட விரோதமாக காவலில் வைத்துள்ளனர். விசாரணையின் போது கொடூரமாக தாக்கியுள்ளனர். காயங்கள் காரணமாக, இரண்டு கைகளில் தலா நான்கு விரல்கள் அகற்றப்பட்டன. இதனால், அவரால் ஆட்டோ ஓட்ட முடியவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.தமிழக காவல்துறை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் வாதாடுகையில்,'மனுதாரரின் மகன், 2016ல் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர். 2017 ஆகஸ்ட், 30ல் கைது செய்யப்பட்டார். 'அவரிடம் இருந்து திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் தாக்கியதால் காயங்கள் ஏற்படவில்லை. விபத்தில் காயங்கள் ஏற்பட்டதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல' என்றனர். கடும் காயங்கள்
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் மகனுக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், அதற்குரிய செலவை அரசே ஏற்கவும், நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. தனியார் மருத்துவமனை அளித்த அறிக்கையில், 'ஷேக் சாஹுல் ஹமீதுவின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவரது ஒவ்வொரு கையிலும் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காயங்கள் போலீசார் தாக்கியதில் ஏற்படவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதனை, நீதிமன்றம், 2017ல் நியமித்தது. அவர் அளித்த அறிக்கையில், 'விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரின் தொடை, கால், பின்பகுதி ஆகியவற்றில் கடும் காயங்கள் இருந்தன. இவை லத்தியால் தாக்கியதில் ஏற்பட்டிருக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே, ஷேக் ஷாகுல் ஹமீதுக்கு, தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த, விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். கடந்த 2017 ஆக., 27 முதல் 31 வரை, சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில், பணியில் இருந்த போலீசார் மீது, ஒரு மாதத்திற்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் விசாரித்து இறுதி உத்தரவுகளை, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.