மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
தேனி : ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்க, 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக ஆண்டிப்பட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் மீது விவசாயி மணி கலெக்டர் பழனிசாமியிடம் புகார் தந்தார்.தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் மணி, 50. இவர் கலெக்டர் பழனிசாமியிடம் தந்த புகார் மனு: லோயர் கேம்ப் மின்நிலையம் அருகே உள்ள இடத்தை, பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், கூடலூர் நகராட்சித் தலைவர் ஜெயசுதாவின் (காங்.,) கணவர் செல்வேந்திரன், அந்த இடத்திற்காக, 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார். அதன்பின் செல்வேந்திரனின் சகோதரர் சேரலாதன் (அ.தி.மு.க., பாசறை மாவட்ட தலைவர்), எம்.எல்.ஏ., அனுப்பி வைத்ததாகக் கூறி, புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்க, 10 லட்ச ரூபாய் வேண்டும் என்றார். தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.,விடம் நான் கேட்டபோது, செல்வேந்திரன், சேரலாதன் சொன்னதைச் செய்ய வேண்டும் எனக்கூறி மிரட்டினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்தது. அங்கு வந்த எம்.எல்.ஏ.,' இவனது பட்டா நிலத்தையும் சேர்த்து எடுங்கள்' என்றார். அதிகாரிகள் வாழை, தென்னை மரங்களை அழித்தனர். இதனால், 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ., கருத்து: தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., கூறியதாவது: கூடலூரில் சேகரமாகும் குப்பைகள் கொட்ட, பளியன்குடி அருகே பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்தைத் தேர்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அரசுக்கு பரிந்துரை செய்தேன். அதன்படி, ஆக்கிரமிப்பை அகற்றி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்த மணி என்னிடம் கேட்டார். நான் சம்மதிக்காததால், பணம் கேட்டு மிரட்டியதாக தவறான புகாரைத் தந்துள்ளார்.இவ்வாறு எம்.எல்.ஏ., கூறினார்.
கலெக்டர் பழனிசாமி கூறுகையில், 'கூடலூரில் விவசாயி மணி ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை மீட்டுள்ளோம். தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மீது மணி புகார் தந்துள்ளார். அதன் உண்மை நிலையறிய ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
2 hour(s) ago