உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு நகை கடன் வாங்க ஆர்வம்; 17 லட்சம் பேருக்கு ரூ.170 கோடி

கூட்டுறவு நகை கடன் வாங்க ஆர்வம்; 17 லட்சம் பேருக்கு ரூ.170 கோடி

சென்னை:கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், நகை கடன் வாங்க பலரும் ஆர்வம் காட்டுவதால், கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 17 லட்சம் பேருக்கு, 170 கோடி ரூபாய்க்கு நகை கடன்கள் வழங்கப்பட்டுஉள்ளன.

நகை கடன்

தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன்கள் வழங்கப்படுகின்றன. கடந்த, 2024 - 25ல், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய் நகை கடன்கள் வழங்கப்பட்டன. 'அடமானம் வைக்கும் தங்க நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை, வாடிக்கையாளர் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது.

ஆர்வம்

'ரிசர்வ் வங்கி விதிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது; எவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்தாலும், அதற்கு ஏற்ப நகை கடன் வழங்கப்படும்' என, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். அதனால், கூட்டுறவு வங்கிகள், சங்கங்களின் நகை கடன் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 17 லட்சம் பேருக்கு, 170 கோடி ரூபாய்க்கு நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில், 14 லட்சம் பேருக்கு, 119 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தனியார் வங்கிகள், அடகு நிறுவனங்களை போல, கூட்டுறவு நிறுவனங்களில் அதிக வட்டி வசூலிப்பதில்லை. குறித்த காலத்திற்குள் வட்டி, அசல் செலுத்தவில்லை என்றாலும், உடனே நகைகளை ஏலம் விடுவதில்லை. வாடிக்கையாளர்களை பல முறை தொடர்பு கொண்டும் செலுத்தவில்லை எனில் தான் ஏலம் விடப்படுகிறது. இதனால், பலர் கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வாங்குகின்றனர். ரிசர்வ் வங்கி விதிகளால் ஏற்பட்ட குழப்பத்தால், தற்போது அதிகம் பேர் நகை கடன் வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
ஜூன் 26, 2025 07:41

தேர்தல் வர இருப்பதால் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தள்ளுபடி செய்துவிடுவர் என்ற எண்ணத்தில் கடன்கள் வாங்க ஆர்வம் செலுத்துகின்றனர்.


Parthasarathy Badrinarayanan
ஜூன் 26, 2025 05:58

ஆம் ஊழல்வாதிகள் துணையோடு கவரிங் நகை வைத்தும், குறைவான எடையைக் கூட்டிப் போட்டு அதிக கடன் வாங்கலாம்.அதனால்தான் போட்டி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை