ரூ.500 கோடி மோசடி சென்னை ஆசாமி கைது
சென்னை:'ஹைபாக்ஸ்' என்ற செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சென்னை வாலிபரை கைது செய்து, அவரின் கூட்டாளிகளை, டில்லி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவராமன் ஜெயராமன். அதே பகுதியில், 'சுற்றுலா எக்ஸ்பிரஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர், 'ஹைபாக்ஸ்' என்ற செயலியை நிர்வாகிக்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.இந்த செயலியில் பணம் முதலீடு செய்தால், தினமும், 1 - 5 சதவீதம் வரையிலும், மாதம் 30 - 90 சதவீதம் வரையிலும் வட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டு, 30,000 பேரிடம், 500 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி நடந்துள்ளது.இது தொடர்பாக, தேசிய சைபர் குற்றத்தடுப்பு பிரிவுக்கு, 488 பேரும், டில்லி போலீசாரிடம், 89 பேரும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, டில்லி சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, சிவராமன் ஜெயராமனை கைது செய்து, டில்லி அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.சென்னையில் முகாமிட்டுள்ள, டில்லி சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், சிவராமன் ஜெயராமன் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர். மேலும், அவரின் நிறுவனத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். சிவராமன் ஜெயராமனின் வங்கி கணக்கில் இருந்து, 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.