காயமடைந்த பெண்ணுக்கு ரூ.50,000 இழப்பீடு
சென்னை:'ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரால், தள்ளி விடப்பட்டு காயமடைந்த பெண்ணுக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை:கோவை - திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில், நேற்று முன்தினம் காலை பயணித்த, பெண் பயணியை தள்ளிவிட்டதில், காயமடைந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. கிராமவாசிகளால் அவர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரயில்வே போலீசார் விசாரணையில், ஜோலார்பேட்டை நிலையத்தில் கடைசி நேரத்தில், குடிபோதையில் இருந்த ஒருவர் ஓடும் ரயிலில் ஏறி பெண்கள் பெட்டிக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது. அந்த பெட்டியில், தனியே பயணித்த நான்கு மாத கர்ப்பிணியை, அந்த நபர் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவர் துணிச்சலுடன் எதிர்த்ததால், ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்த விரைவான நடவடிக்கையால், சம்பவம் நடந்த, 12 மணி நேரத்திற்குள், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த பெண் பயணிக்கு, இன்று 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.பயணியர் அவசரத்திற்கு, ரயில்வே உதவி எண் 139ஐ தொடர்பு கொள்ளலாம். முக்கியமான ரயில் நிலையங்களில், தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற ரயில் நிலையங்களிலும், ஏப்ரல் மாதத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி சிக்கியது எப்படி?
ஓடும் ரயிலில் பெண்ணிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட நபரை, ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட ரயில், 'கார்டிடம்' விசாரித்தனர். அவர், 'ரயில் புறப்படும் போது, கடைசி நேரத்தில் ஒருவர் வேகமாக வந்து ஏறினார். அவர் மீது சந்தேகம் உள்ளது' என்று தெரிவித்தார். உடனே, அந்த நபரின் போட்டோவை, கண்காணிப்பு கேமராவில் இருந்து எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்த போது, அவர் அந்த நபர் தான் என உறுதி செய்தார். இது குற்றவாளியை விரைந்து பிடிக்க உதவியது. பயணியர் பாதுகாப்பில், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா மூன்றாவது கண்ணாக செயல்பட்டுள்ளது. தற்போது, ரயில்களில் போலீசார் இரவில் அதிக அளவில் ரோந்து பணிக்கு செல்கின்றனர். இனி, பகலிலும் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.