உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 35 அரசு அலுவலகங்களில் ரூ.53 லட்சம் பறிமுதல்

35 அரசு அலுவலகங்களில் ரூ.53 லட்சம் பறிமுதல்

சென்னை:தமிழகம் முழுதும், 35 அரசு அலுவலகங்களில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 53 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், மாநிலம் முழுதும் உள்ள 35 அரசு அலுவலகங்களில், நேற்று முன்தினம் மாலை 3:30 மணியில் இருந்து நேற்று காலை வரை விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

புரோக்கர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார் -- பதிவாளர் அலுவலகத்தில், ரெக்கார்டு ரூம், கழிப்பறை, மின் சாதன அறைகளில் பதுக்கி வைத்திருந்த 53,510 ரூபாயை பறிமுதல் செய்தனர். பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் புரோக்கர்கள் கொடுத்து வைத்திருந்த, 1.05 லட்சம் ரூபாயையும் கைப்பற்றினர். தமிழக - ஆந்திர எல்லையில், வேலுார் மாவட்டம் கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில், 1.38 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அங்கு, மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் ஸ்ரீதேவி ஜெயந்தியின் வீட்டில், 4.45 லட்சம் ரூபாய், வீடு மற்றும் நிலம் தொடர்பான ஆறு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம் எலவம்பட்டியில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 72,000 ரூபாயை கைப்பற்றினர்.

'கூகுள் பே'

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், இரவு 12:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 12,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு, அங்குள்ள அதிகாரி ஒருவர், 'கூகுள் பே' வாயிலாக, 6 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்துள்ளது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நேற்று அதிகாலை 3:00 மணி வரை சோதனை நடந்தது. இரவு நேரத்தில் அந்த அலுவலக ஊழியர் சரத் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இந்த அலுவலகத்தில், 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாநிலம் முழுதும், 35 அரசு அலுவலகங்களில் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில், 53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை