கலப்பு திருமண ஜோடிகளுக்கு பாதுகாப்பு தர உத்தரவு
சென்னை:'தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், கலப்பு திருமணம் செய்தோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுதும் கலப்பு திருமண பிரச்னைகள் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கலப்பு திருமண ஜோடிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஐ.ஜி.,க்கள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, கலப்பு திருமண ஜோடிகளின் மொபைல் போன் எண்களை சேகரித்து, அவர்களிடம் பாதுகாப்பு தொடர்பாக பேசி வருகிறோம். உடனடியாக பாதுகாப்பு தேவைப்படும் நபர்களுக்கு, ரோந்து வாகன போலீசாரின் மொபைல் போன் எண்களும் தரப்படுகின்றன. பாதுகாப்பு தேவைப்படும் கலப்பு திருமண ஜோடிகள், போலீசாரின் முழு கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.