ரூ.15,000 சம்பளம்: துாய்மை பணியாளர் சங்கம் கோரிக்கை
சென்னை,:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத், ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர் நலச்சங்க செயலர் சாந்தி ஆகியோர் அளித்த பேட்டி:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆர்.சி.எச்., திட்டத்தின் கீழ், தற்காலிக அடிபடையில், 3,140க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக, 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை, 15,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட பணியை தவிர, ஊசி போடுவது, கட்டு போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மகப்பேறு டாக்டர், மயக்க மருந்து டாக்டர், குழந்தைகள் டாக்டர், அறுவை அரங்கம் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் பிரசவம் பார்க்கப்பட வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, வரும் 20ம் தேதி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.