உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம் பொதுக்குழு கேலிக்கூத்து பா.ம.க.,வை கட்டுப்படுத்தாது: பாலு

சேலம் பொதுக்குழு கேலிக்கூத்து பா.ம.க.,வை கட்டுப்படுத்தாது: பாலு

சென்னை: “ராமதாஸ் தலைமையில் சேலத்தில் நடந்த பொதுக்குழு கேலிக்கூத்து. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பா.ம.க.,வை கட்டுப்படுத்தாது,” என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அன்புமணி ஆதரவாளருமான வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். அவரது பேட்டி: சேலத்தில் நடந்தது பா.ம.க., பொதுக்குழு அல்ல. கட்சியின் தலைவர், பொதுச்செயலர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். சேலத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வை கட்டுப்படுத்தாது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி, பா.ம.க., தலைவராக ராமதாஸ் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். பொதுக்குழுதான் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என நாங்கள் கூறினோம். அதன்பின், மே 29ம் தேதி தலைமை நிர்வாகக்குழு கூடி, ராமதாசை தலைவராக தேர்ந்தெடுத்ததாக அறிவித்தனர். ஆனால், அப்படியொரு கூட்டம் நடந்ததாக எந்த செய்தியும் வரவில்லை. கடந்த ஜூலை 8ம் தேதி நடந்த செயற்குழுவிலும், ஆகஸ்ட் 17ல் நடந்த பொதுக்குழுவிலும் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். இதை தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பினர்; அதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. ஆனால், ஆகஸ்ட் 9ம் தேதி நாங்கள் நடத்திய பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று, பா.ம.க., தலைவர் அன்புமணியின் பதவிக் காலத்தை, 2026 ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. பா.ம.க., தலைவர் தொடர்பான பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளுமாறு தேர்தல் கமிஷன் கூறியதை, டில்லி உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. சேலத்தில் நடந்த கூட்டம் அபத்தம்; கேலிக்கூத்து. ராமதாஸ், இந்த பொதுக்குழுவில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், நேற்று வரை அன்புமணி தலைவர் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதுதான் பொருள். அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களில் முரண்பாடுகள் உள்ளன. எழுதிக் கொடுத்ததை ஸ்ரீ காந்தி பேசுகிறார். தி.மு.க., அரசை விமர்சிக்காமல், மக்கள் பிரச்னைகளை பேசாமல் பொதுக்குழு நடந்தது அபத்தமானது. ராமதாஸ் தரப்புடன் கூட்டணி பேச்சு நடத்த எந்தக் கட்சியும் முன்வரவில்லை. பொது அரங்கில் அன்புமணியை, 'வாடா போடா' என பேசுவதை, ஸ்ரீ காந்தி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சவுமியாவை நீக்க முடியாது

“பசுமைத் தாயகம் என்பது, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசுசாரா தொண்டு அமைப்பு. அரசியல் கட்சி கூட்டங்களில், பசுமைத் தாயகம் தலைவரை யாரும் நீக்க முடியாது. தலைவர் தாமாக பதவி விலகினால் தான், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பசுமைத் தாயகம் தலைவராக சவுமியா நீடிக்கிறார்,” என்றார் பாலு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ