உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனத்குமார் ஆற்றை காணோம் கண்டுபிடித்து தர போஸ்டர்

சனத்குமார் ஆற்றை காணோம் கண்டுபிடித்து தர போஸ்டர்

தர்மபுரி,:'தர்மபுரியில் ஓடும் சனத்குமார் ஆற்றை காணவில்லை; அதை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர வேண்டும்' என, விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பாக, தர்மபுரி நகரத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்று சனத்குமார் ஆறு. வத்தல்மலை அடிவாரம் மற்றும் பதிகால் பள்ளம்பகுதியில் மழை பெய்யும்போது, இந்த ஆற்றுக்கு நீர்வரத்து இருக்கும்.

துர்நாற்றம்

வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து, பெருக்கெடுத்து வரும் காட்டாற்று வெள்ளம், சின்னேரி, மாதேமங்கலம் ஏரி, ஏமகுட்டியூர் தடுப்பணை வழியாக, இலக்கியம்பட்டி ஏரிக்கு வருகிறது. பின், சனத்குமார் ஆறாக உருவெடுத்து, தர்மபுரி நகரின் வழியாக, கம்பைநல்லுார் அடுத்த இருமத்துாரில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஆற்றில் ஓடிய நீரை, புனித நீராக மக்கள் பயன்படுத்தினர். இந்த ஆற்று நீர், வழி நெடுகிலும் பல்வேறு ஏரிகளுக்கு நீராதாரமாக இருந்து வந்தது. ஆண்டு முழுதும் சனத்குமார் ஆற்றுப்பகுதியில் நெல், கரும்பு, மஞ்சள், ராகி, காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்பட்டு வந்தன.பருவநிலை மாற்றம், ஆற்றில் ஆக்கிரமிப்பு, சாக்கடை நீர் கலப்பால், சனத்குமார் ஆறு பராமரிப்பின்றி சாக்கடை ஓடும் கால்வாயாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. தர்மபுரி நகர பகுதியில், 7 கி.மீ., தொலைவிற்கு கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், குப்பை கிடங்காகவும் ஆறு மாறியுள்ளது. ஆற்றின் கால்வாயை அகலப்படுத்தி, துார்வார, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்ட நிர்வாகம், 62 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.இந்நிலையில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தால், ஆறு காணாமல் போனதாக விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில், தர்ம புரி நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.சனத்குமார் ஆறு பாதுகாப்பு விவசாயிகள் சங்க, மாவட்ட தலைவர் கந்தசாமி கூறியதாவது:சனத்குமார் ஆற்றில், தர்மபுரி நகராட்சியின் திறனற்ற நிர்வாகத்தினால், திரும்பிய பக்கமெல்லாம் சாக்கடை நீர் கலந்து வருகிறது.

போராட்டம்

பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் சனத்குமார் ஆறு மாசடைந்து, கழிவுநீர் கால்வாயாக மாறி, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இதை, ஜீவாதாரமாக பயன்படுத்திய தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஒன்றியங்களில், 55 பஞ்.,களை சேர்ந்த, 50,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், துரைமுருகன் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தோம். எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை இல்லை. இதே நிலை தொடர்ந்தால், சனத்குமார் பாசன விவசாயிகளை ஒருங்கிணைத்து, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்நடத்துவோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி