சென்னை: ''சாவர்க்கர் தலைசிறந்த சமூக சீர்த்திருத்தவாதி,'' என, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் பேசினார்.பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா எழுதியுள்ள, 'வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை' என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. நுாலின் முதல் பிரதியை, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் சந்தோஷ் பேசியதாவது: சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திர போராட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் சாலை, சுபாஷ் நகர், பஸ் நிலையத்துக்கு அவரது பெயரை பார்ப்பதே கடினமாக இருந்தது. ஆனால், நேரு, இந்திரா, ராஜிவ் பெயரில் சாலைகளின் பெயர்களை பார்க்க முடிந்தது. பகத்சிங், சந்திரசேகர், மதன்லால் உள்ளிட்ட சுதந்திரத்திற்காக போராடியவர்களின் பெயர்கள் பெரிய அளவில் யாருக்கும் தெரியாது.ஆங்கிலயர்களின் தண்டனையால், தன் பட்டப்படிப்பை இழந்தவர் சாவர்க்கர். சுதந்திரப் போராட்டத்தில் அதிக காலம் சிறையில் இருந்தார். 27 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்தவர். தேசத்திற்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு, எந்தவித அடையாளமும் இல்லாமல் இறந்தவர். கோட்சேவுக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதாக, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். சாவர்க்கர் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி. சாவர்க்கர் போல் பலரின் போராட்டங்களும் தியாகங்களும் மறைக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், உண்மையான சுதந்திரப் போராட்ட தியாகிகள் புத்தகங்களில் இடம்பெறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.அண்ணாமலை பேசியதாவது: சிறிய வயதில் இருந்தே, சாவர்க்கர் போராட்டம் நடத்தி உள்ளார். ஜாதியை எதிர்த்து பூணுாலை கழற்றிப் போராடினார். சமபந்தி போஜனத்தைக் கொண்டுவர போராடினார். நாட்டிற்காக கருத்தியல் ரீதியாக போராடிவர். இரண்டு விஷயங்களுக்காக, அவர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்.அந்தமான் சிறையில் கொடுரமான தண்டனையை அவர் அனுபவித்தார். இறக்க வேண்டுமென்று முடிவு செய்து, 26 நாட்கள் உணவு உண்ணாமல் இருந்து உயிரிழந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களும் சாவர்க்கரை, திறந்த மனதோடு அணுக வேண்டும். அவர் பிராமணர் என்பதற்காக, தமிழகத்தில் நிராகரிக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த புத்தகத்தில் சரித்திரத்தை துல்லியமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள அனைத்தும் பேசிட முடியாது. அந்த அளவுக்கு அதிக விஷயங்கள் இருக்கின்றன. எனவே, அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.