உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி நிலத்தை கல்வியை தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது; ஐகோர்ட் கிளை உத்தரவு

பள்ளி நிலத்தை கல்வியை தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது; ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 'எதிர்காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லுார் அரவிந்த் தாக்கல் செய்த மனு: சிறுத்தொண்ட நல்லுாரில் முத்துமாலையம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதில் வேறு எந்த கட்டடமும் கட்டாமல் மைதானமாகவே பாதுகாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வின் ராஜசிம்மன் ஆஜரானார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: மக்கள் தானமாக வழங்கிய 8.67 ஏக்கரில் பள்ளி அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனிற்காக, அவ்வளாகத்தில் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) மற்றும் பல்நோக்கு மையம் அமைக்கப்படும். இம்மையம் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தர பயன்படுத்தப்படும். மற்ற நேரங்களில் அது வகுப்பறையாக பயன்படுத்தப்படும். இரு கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதி வெவ்வேறு சர்வே எண்களில் உள்ளது. புது கட்டடத்தால் விளையாட்டு மைதானத்தின் பரப்பளவு குறையாது என்றார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வரைபடத்தின்படி தற்போதுள்ள விளையாட்டு மைதான பகுதியை ஐ.டி.ஐ.,மற்றும் தங்குமிடம் அமைப்பதற்கான கட்டுமானத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை. விளையாட்டு மைதான பகுதி வேறு எந்த நோக்கத்திற்காகவும் எப்போதும் பயன் படுத்தப்படாது என அரசு தரப்பில் அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்கிறோம். எதிர் காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை