உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது: வலுக்கட்டாயமாக சென்னையிலிருந்து வெளியேற்றம்

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது: வலுக்கட்டாயமாக சென்னையிலிருந்து வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 19வது நாளாக இன்று( ஜனவரி 13) போராட்டத்தில் ஈடுபட்ட, இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று, சென்னைக்கு வெளியே, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இறக்கி விட்டனர். 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கடந்த மாதம், 26ம் தேதி முதல், சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த உள்ள இடத்தை முன்னதாக அறிவித்தால், போலீசார் தடுத்து விடுகின்றனர். எனவே, இடத்தை அறிவிக்காமல், திடீரென காலை ஒரு இடத்தை தேர்வு செய்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுக்க முடியாமல் திணறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பின் கைது செய்து மாலை விடுவிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து, அவர்கள் சொந்த மாவட்டத்திற்கு அழைத்து சென்று அவர்கள் வீட்டில் விட்டனர். அத்துடன் அவர்களை வீட்டு காவலிலும் வைத்தனர்.சென்னையில் கைது செய்யப்படுவோருக்கு, மதிய உணவு வழங்காமல் மாலை விடுவித்தனர். நேற்று முதல் விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றியதுடன், அவர்களுக்கு அறை வழங்கக்கூடாது என, விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் அனைத்து விதமான கெடுபிடிகளை மீறி, இன்று 19வது நாளாக, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை மேப்பாலத்தில், குழந்தைகளுடன் அமர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர்களை வெவ்வேறு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். வாகனம் எங்கும் நிற்காமல் சென்றது. எங்கு அழைத்து செல்கிறீர்கள் எனக்கேட்டு போலீசாரிடம், ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சென்னையை சுற்றி வந்த போலீசார், மாலை தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு என, வெவ்வேறு பகுதிகளில், ஆசிரியர்களை இறக்கி விட்டனர். இதுகுறித்து, கைதான ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:எங்களை கைது செய்யும் போலீசார், உணவு, தண்ணீர் தராமல், வாகனங்களில் டீசல் தீரும் வரை, நகரங்களை சுற்றி வருகின்றனர். இயற்கை உபாதைக்கு கூட, வாகனத்தை நிறுத்த மறுக்கின்றனர். தமிழக அரசு போலீசாரை வைத்து, எங்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை