கட்டட அனுமதி வரைபடங்கள் பார்க்க டி.டி.சி.பி., புதிய வசதி
சென்னை, : கட்டட அனுமதி வரைபடங்களை புவியியல் சார்ந்த தகவல்களுடன், பொதுமக்கள் எளிதாக மொபைல் போன் வாயிலாக அறிய, புதிய வசதி உருவாக்கப்பட உள்ளதாக, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10,000 சதுரடி வரையிலான திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குகின்றன. அதற்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களுக்கு, டி.டி.சி.பி., ஒப்புதல் வழங்குகிறது. தற்போது இந்த பணிகள், 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. திட்ட அனுமதி வழங்கப்பட்ட விபரங்கள், வரைபடங்களை, டி.டி.சி.பி., அதிகாரிகள் இணையதளத்தில் வெளியிடுகின்றனர். வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி, சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் தெரிவதில்லை. இந்நிலையில், கட்டுமான திட்டங்கள் எங்கு செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கான புவியியல் தகவல்களுடன் வரைபடங்களை, பொதுமக்கள் பார்க்க புதிய வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் தகவல் அமைப்பான ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப வசதியுடன், திட்ட அனுமதி வரைபடங்களை, பொது மக்கள் மொபைல் போன் வாயிலாக பார்க்க இந்த வசதி உதவும். இதற்கான தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.