உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி டி.ஐ.ஜி., தொடர்ந்த அவதுாறு வழக்கு கெடுவை ஏற்று கோர்ட்டில் ஆஜரானார் சீமான்

திருச்சி டி.ஐ.ஜி., தொடர்ந்த அவதுாறு வழக்கு கெடுவை ஏற்று கோர்ட்டில் ஆஜரானார் சீமான்

திருச்சி:திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும், 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த வருண்குமாரையும், அவரது குடும்பத்தாரையும், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதுாறாக பதிவிட்டனர். மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் பேட்டியில், எஸ்.பி., வருண்குமார் குறித்து தரக்குறைவாகவும், அவதுாறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் அளித்த வருண்குமார், தன்னை சீமான் அவதூறாக பேசியதற்காக, திருச்சி, நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் திருச்சி டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்ற வருண்குமார், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார்.இதையடுத்து, சீமானை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆஜராகவில்லை. சென்னையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொள்ள சென்றிருப்பதால், நீதிமன்றம் வர முடியவில்லை என, நீதிபதியிடம் சீமான் வழக்கறிஞர்கள் கூறி, ஆஜராக ஒரு நாள் அவகாசம் அளிக்குமாறு கோரினர். இதனால், வரும் 8ல் கண்டிப்பாக சீமான், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி விஜயா. இதை ஏற்றுக் கொண்ட சீமான், நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வழக்கு தொடர்பாக வருண்குமார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களின் நகல்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என சீமான் தரப்பு நீதிபதியிடம் கோரியது. இதையடுத்து, வருண்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆறு ஆதாரங்கள், சீமானிடம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 29க்கு தள்ளி வைக்கப்பட்டது.

என்கவுண்டர்கள் போலியானவை!

நீதிமன்றத்தில் ஆஜரான பின், சீமான் அளித்த பேட்டி:அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாமி ரவி, திண்டுக்கல் துரை ஆகியோரை, போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில், சமீப காலமாக நடத்தப்பட்ட அனைத்து என்கவுன்டர்களும் போலியானவை. உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டறிவதில்லை. வழக்குகளை எப்படியாவது முடிப்பதில் தான் முனைப்பாக உள்ளனர்.யார் வேண்டுமானாலும், எந்த மொழியையும் படிக்கலாம்; அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்த வரை, இதுவரை யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. வரும் சட்டசபைத் தேர்தலிலும், எங்கள் நிலைப்பாடு அதுதான். தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது. அதனால், அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. தேர்தல் நெருக்கத்தில் இப்படி சோதனை நடப்பது வழக்கமானதுதான்.அண்ணாமலையும் நானும் இரு வேறு கட்சிகளில் இருந்தாலும், இருவரும் சகோதரர்கள் தான். அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே அவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ