தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் தர வேண்டும் * சீமான் வலியுறுத்தல்
சென்னை:'உணவு பாதுகாப்பு துறையால் பாதிப்படைந்த, தர்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆய்வு என்ற பெயரில், தர்பூசணி குறித்த தவறான தகவல்களை பரப்பியதால், விற்பனை குறைந்து, தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் தர்பூசணியில் செயற்கை ரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில், பொய்யான தகவல்களை பரப்பிய, உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் செயல் கண்டனத்துக்குரியது.தற்போது தான், இயற்கை உணவுகள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து உள்ளது. நலம் தரும் சத்துகள் நிறைந்த இயற்கை பானங்களையும், பழங்களையும் அதிகளவில் விற்னை செய்ய ஊக்கப்படுத்த வேண்டியது, அரசின் கடமை. ஆனால், நேர்மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில், ரசாயனம் கலக்கப்படுவதாக, அரசு அதிகாரிகளே வதந்திகளை பரப்பி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தர்பூசணி விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.தமிழக அரசின் அதிகாரிகளால் ஏற்பட்ட பொய் பரப்புரையால், தர்பூசணி விற்பனை பெருமளவு குறைந்து, நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை, அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.