உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை விட போலீஸ் கூட்டம் அதிகம்; ஈரோடில் சீமான் பிரசாரம் பிசுபிசுப்பு

மக்களை விட போலீஸ் கூட்டம் அதிகம்; ஈரோடில் சீமான் பிரசாரம் பிசுபிசுப்பு

ஈரோடு : ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த சீமானுக்கு கூட்டம் சேராததால் ஏமாற்றத்துடன் பிரசாரம் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். காளை மாட்டு சிலை, மரப்பாலம், மண்டபம் வீதி ஜங்ஷன் பகுதிகளில் வேனில் ஓட்டு சேகரித்தார். பிரசாரத்துக்கு மக்கள் கூடவில்லை. சொற்ப அளவிலான அவரது கட்சியினர் மட்டுமே காணப்பட்டனர். அதே சமயம், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டம் சேராததால் ஏமாற்றத்துடன் அவர் பிரசாரம் செய்தார்.மண்டபம் வீதி ஜங்ஷனில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோவன் வீட்டருகே, சீமான் பிரசார வேன் நின்ற போது, அக்கட்சியை சேர்ந்த இடும்பாவன் கார்த்தி, ஈ.வெ.ரா.,வை விமர்சித்து பேசினார். இளங்கோவன் வீட்டு முன் நின்றிருந்த காங்., சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜூபைர் அகமது தலைமையிலான கட்சியினர், தி.மு.க.,வினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீமான் பிரசாரம் செய்யக்கூடாது என்றும் கோஷமிட்டனர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு கோஷமிட, பதற்றமான சூழல் ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார், இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்தனர். தொடர்ந்து சீமான் பிரசார வாகனம் அங்கிருந்து சென்றது.

'சாதனை ஒன்றும் இல்லை'

பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: மாநில உரிமை, மாநில தன்னாட்சி பறிபோனது தி.மு.க., ஆட்சியில் தான். கச்சத்தீவை மீட்போம் என்று ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், 18 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்தது தி.மு.க., தான். மருத்துவம், மின் உற்பத்தி, மின் வினியோகம், வரி வருவாயை மத்திய அரசுக்கு, சுய லாபத்துக்காக தாரைவார்த்து விட்டு, தற்போது மாநில சுயாட்சி பற்றி பேசுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க., ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு, ஒரே வரி திட்டத்துக்கு எதிர்க்காதது ஏன்? அனைத்து நாசகார திட்டங்களையும் தமிழகத்துக்கு கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.,; அவற்றை செயல்படுத்தி வருவது பா.ஜ., மூன்றரை ஆண்டு ஆட்சியின் சாதனையை சொல்லி தி.மு.க.,வினர் இடைத்தேர்தலில் ஓட்டு கேட்க வேண்டியது தானே? முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கூட ஓட்டு கேட்க வரவில்லை. ஆட்சியின் சாதனை ஒன்றும் இல்லை. மகளிர், மாணவர், மாணவிக்கு உதவித்தொகை கொடுத்ததை தவிர, வேறெந்த திட்டமும் இல்லை. தி.மு.க., என்றாலே ஊழல், லஞ்சம், கமிஷன் தான். முறைகேடான நிர்வாகம் உள்ளது. மக்கள் இதை சகித்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
ஜன 26, 2025 17:14

கூட்டமே இல்லாததற்கு ஏன் இவ்வளவு போலீஸ் கூட்டத்தை விரட்டி அடிக்க வா .மக்களிடம் கேட்டால் உண்மை தெரியும்


Dharmavaan
ஜன 26, 2025 17:13

சீமான் கூலி கொடுத்து கூட்டம் சேர்க்க முடியவில்லை என்பதே காரணம்


netrikannan
ஜன 26, 2025 09:30

சீமான் அவர்களே இப்போது தெரிகிறதா ஏன் முக்கிய கட்சிகள் இடைத் தேர்தலை புறக்கணித்தது என்று?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை