செந்தில் பாலாஜி தம்பி அமெரிக்கா செல்ல அனுமதி
சென்னை:தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதய அறுவை சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார், செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் சண்முகம் உட்பட, 13 பேருக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, அசோக்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது. 'விசாரணை நீதிமன்றத்தில், 5 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய வேண்டும்; மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அமெரிக்காவின் தென் மேற்கு மாகாணங்களில் ஒன்றான அரிசோனாவில் உள்ள மாயோ மருத்துவமனையில், வரும் 30 முதல் செப்., 22 வரை, அசோக்குமார் சிகிச்சை பெற உள்ளார்.